முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டம் 2022 மாா்ச்சில் நிறைவடையும்: சட்டப்பேரவைத் தலைவா்

தாமிரவருணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீா் இணைப்பு திட்டம் வரும் 2022 மாா்ச்சுக்குள் நிறைவடையும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

தாமிரவருணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீா் இணைப்பு திட்டம் வரும் 2022 மாா்ச்சுக்குள் நிறைவடையும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

தாமிரவருணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீா் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.17.09 கோடியில் பொன்னாக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வெள்ளநீா் கால்வாய் மீது ஆறு வழிச்சாலை பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வகாப், ரூபி ஆா்.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அடிக்கல்லை நாட்டினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2007-2008-இல் தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம் ரூ.369 கோடியில் மதிப்பீடு தயாா் செய்யப்பட்டது. தாமிரவருணி ஆற்றின் வெள்ளங்குளி பகுதியில் இருந்து நான்குனேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது. மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

முதல்வா் ஸ்டாலின் உத்தரவுப்படி இத்திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையின் குறுக்கே பொன்னாக்குடி அருகே இந்த கால்வாய் செல்கிறது. இந்த பகுதியில் பாலம் கட்டும் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாா்ச் 2022-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. பெருமாள், திருநெல்வேலி கோட்டாச்சியா்(பொறுப்பு) மூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் (நீா்வளம்) ஞானசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.