இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
ராசிபுரம் கம்பன் கழக நிறுவனர் மு. ராமசாமி என்கிற புலவர் மு.ரா. மறைந்துவிட்டார்.
ராசிபுரம் கம்பன் கழக நிறுவனர் மு. ராமசாமி என்கிற புலவர் மு.ரா. மறைந்துவிட்டார். அகவை நூறை எட்டியிருக்கிறார் அந்தத் தமிழறிஞர் என்று அகமகிழ்ந்த தமிழ் அன்பர்களுக்கும், குறிப்பாக கம்பன் மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் இது பேரிழப்பல்லாமல் வேறென்ன?
2022 செப்டம்பர் 25-ஆம் தேதி நாமக்கல் கம்பன் கழகம் அவருக்குக் 'கம்பர் விருது' விருது வழங்கி கெளரவித்தது. அந்த நிகழ்வில் நீதியரசர் சுரேஷ்குமாருடன் நானும் கலந்து கொண்டேன். அதுதான் அவருடனான எனது கடைசி சந்திப்பு.
அதற்கு முன்பு, ஒரு முறை பாஜகவின் மாநில துணைத் தலைவர் நண்பர் கே.பி. ராமலிங்கத்தைச் சந்திக்க ராசிபுரம் சென்றிருந்தபோது, அவரை வீடு தேடிச் சென்று சந்திக்க நான் மறக்கவில்லை. அதுவரையில் நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வந்தோமே தவிர, நேரில் சந்தித்திருக்கவில்லை. 'இந்த வாரம்' பத்தியில் புலவர் மு.ரா. குறித்து 11.09.22 அன்று நான் செய்திருந்த பதிவு நினைவுக்கு வருகிறது.
Advertisement
''ராசிபுரத்திலிருந்து அவ்வப்போது என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வார் 96 வயதான புலவர் மு. இராமசாமி. அவரது மகன் அழைத்துத் தந்தையிடம் கொடுப்பார். நிறையப் பேசுவார்; பேசிக்கொண்டே இருப்போம்.
'தினமணி' நாளிதழ் வெளியானது முதல் அதன் வாசகராக இருக்கும் வெகு சிலரில் புலவர் மு. இராமசாமியும் ஒருவர் என்பதை அவரது வயதைக் கேட்டதுமே நான் புரிந்து கொண்டு விட்டேன். நான் எழுத்துக்கூட்டித் தமிழ் படித்தது 'தினமணி' மூலம்தான் என்று பெருமிதத்துடன் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
ஆசிரியர் உரை, செய்திகள், கட்டுரைகள், தமிழ்மணி என்று 'தினமணி' தொடர்பான பல விஷயங்கள் குறித்து அவர் கருத்துக் கூறுவார்; பாராட்டுவார்; குறைகளைச் சுட்டிக் காட்டுவார்; பிரச்னைகளை விவாதிப்பார். 'தமிழ்மணி' பகுதியை ஒரு வரி விடாமல் படித்து சிலாகிப்பார்'' என்று பதிவு செய்திருந்தேன்.
அவரது பின்னணி குறித்துக் கேள்விப்பட்டபோது நான் ஒரு நிமிடம் அதிர்ந்தேன். அவர் சாதாரண ஆளுமையல்லர். 'வைணவப் பேராசான்' என்று போற்றப்படும் பு.ரா. புருடோத்தம நாயுடுவின் தவமிகு சீடர், 'தமிழ்க் கடல்' ராய.சொ.வின் நற்றமிழ்த் தொண்டர். அவரது படைப்புகளைப் பாராட்டி 34 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக் கம்பன் கழகம், 'அமரர் மர்ரே எஸ்.ராஜம் நினைவுப் பரிசு' வழங்கி இருக்கிறது.
தமிழாசிரியராகத் தன்னை தகவமைத்துக் கொண்ட அந்தப் பெரியவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் பெரும் பதவிகளும் பொறுப்புகளும் வகித்துப் புகழ் பெற்றார்கள். ஆழ் புலமை, ஆராயும் திறன், நுணுகி நோக்கும் நன்னயம், நிறைபெறக் கூறும் நாநயம், நேரிட உரைக்கும் நாணயம் யாவும் ஒருங்கே சேரும் அரும்புலப் புலவர் என்று தமிழறிஞர்களால் போற்றப்படும் மாமனிதர் அவர்.
கம்பர் என்றால் அவருக்கு உயிர்; பாரதி என்றால் உருகுவார்; வள்ளலாரில் தோய்ந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட அவரது நூல்களுக்கு தமிழில் ஆழங்காற்பட்ட அறிஞர்கள் பலரும் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். அவர் வைகுண்டப் பிராப்தி அடைந்தாலும், அவரது படைப்புகளும் நினைவும் தமிழ் உள்ள காலம் நிலைத்து நிற்கும்.
தேர்தல் நேரத்தையொட்டி வாசகர்களின் ஆவலை அறுவடை செய்யும் நோக்கில் பல அரசியல் சார்ந்த புத்தகங்கள் வெளியிடுவதுண்டு. ஆனால், ஆர். ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் 'நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்' என்கிற புத்தகம் ஓராண்டு முன்பே வெளிவந்து விட்டது. அப்போதே நான் படித்து விட்டேன் என்றாலும், தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுதான் அது குறித்த நினைவு வந்தது.
சினிமாவும் அரசியலும் தமிழகத்தைப் பொருத்தவரை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் அரசியலில் ஈடுபடுவர் என்பதும் தமிழகத்தின் வரலாறு. ஆனால், அவர்களில் ஒரு சிலரால் மட்டும்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்பதையும் வரலாறு உணர்த்துகிறது. எரியும் விளக்கைத்தேடி வந்து வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாக அரசியல் ஆசையால் தங்களது திரையுலகப் புகழைப் பொசுக்கிக் கொண்டவர்கள்தான் ஏராளம்.
தமிழக அரசியலோடு அதன் தொடக்க காலம் தொட்டே இருக்கும் திரையுலகத் தொடர்பு குறித்தும், இன்றைய திரைப் பிரபலங்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும் 'நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்' விவரமாகவே பதிவு செய்கிறது. தமிழக அரசியலோடு நின்று விடாமல் உலக அரசியலிலும், தேசிய அரசியலிலும், தென்னிந்திய மாநில அரசியலிலும் தடம் பதிக்க விரும்பிய நடிக, நடிகையர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது இந்தப் புத்தகம்.
அரியணையேறி நாடாண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர். அல்ல. பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 60,000 பேர் மட்டுமே வசித்து வந்த 350 சதுர மைல் பரப்பிலுள்ள சமஸ்தானம் 'சுகட்'. அதன் மன்னனாகத் தனது நடிப்பால் உயர்ந்த நாடோடிக் கோமாளி மியான் மதன். அவரது வம்சம்தான் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த சமஸ்தானத்தை ஆண்டு, பிறகு சுதந்திர இந்தியாவில் இணைந்தது.
இங்கிலாந்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த வாலசா தாலட்கிரே சமூக சேவகராகவும், ஏழைப் பங்காளராகவும் புகழ் பெற்றிருந்தார். லண்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒன்றில் அவர் களமிறங்கியபோது கூடிய கூட்டத்தைப் பார்த்து பிரிட்டன் பிரதமரே மிரண்டு போய் விட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது வாலசா தாலட்கிரே வெறும் 367 வாக்குகள் மட்டுமே பெற்றுப் படுதோல்வி அடைந்தார்.
இப்படிப் பல தகவல்களை உள்ளடக்கிய ஆர். ராதாகிருஷ்ணனின் 'நடிகர்களின் நாற்காலிக் கனவுகள்' தமிழக நடிக, நடிகைகள் குறித்து வெளிப்படுத்தி இருக்கும் தகவல்களைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கவிஞர் பல்லவி குமாரின் இந்தக் கவிதைதான் எனது இந்த வாரத் தேர்வு.
கண்ணாடிகள் பேசினால்
கதைகள் நிறைய
வெளிவந்து விடலாம்...
ஒன்றாக இருக்கையில்
ஒரு குரலில்தான்
பேச முடியும்
உடைந்த கண்ணாடியின்
ஒவ்வொரு சில்லுமே
ஓங்கியே பேசுகின்றன
ஒவ்வொன்றில் இருந்தும்
ஒவ்வொரு கதைகள்