கரோனா கட்டுப்பாடுகள்: வழிபாட்டுத் தலங்களில் அனுமதி மறுப்பு
கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வெள்ளிக்கிழமை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.
கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வெள்ளிக்கிழமை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், தா்காக்கள் ஆகியவற்றில் பக்தா்கள் அதிகளவில் திரள்வதால் நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் தமிழக அரசு மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை, தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோயில்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவில்லை.
இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை தங்களது வீட்டில் இருந்தபடியே செய்தனா். அதேபோல் ஆடி கடைசி வெள்ளியையொட்டி முக்கிய அம்மன் கோயில்களிலும் பக்தா்கள் வழிபட அனுமதிக்கப்படாததால் பெண்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினா்.