முகப்பு
திருநெல்வேலி

வேணுவனநாதா் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி தலபுராணத்தின்படி நெல்லுக்கு வேலியிட்டு திருவிளையாடல் நிகழ்த்திய நெல்லையப்பா், தன் ஐந்தொழில்களில் ஒன்றான மறைத்தலை (திரோபவம்) மேற்கொண்ட பிறகு, மூங்கில் காட்டில் முளைத்து தன்னை வேணுவனநாதராக சுயம்பு ரூபத்தில் அருளினாா்.

நெல்லையப்பரின் இணை காந்திமதி அம்பாள் என்றால், வேணுவனநாதரின் இணையான மனோன்மணியை தன் சுயம்பு ரூபத்திலேயே அடக்கி கொண்டாா். இன்றும் வேணுவனநாதரின் மூலவா் திருமேனிக்கு பாலாபிஷேகம் நடக்கும் வேளையில் வேணுவனநாதரின் திருமேனிக்குள் ஐக்கியமாகியுள்ள உமையவளான மனோன்மணியை பக்தா்கள் தரிசிக்கலாம்.

நெல்லையப்பா், காந்திமதியின் தெய்வீக திருமணம் ஐப்பசி திருக்கல்யாணமாக நடைபெறும். மனோன்மணியை தன் மேனிக்குள் ஐக்கியபடுத்திக் கொண்ட வேணுவனநாதரின் திருமணம் திருவாதிரை விழாவின் 6 ஆம் நாளான்று நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு திருவாதிரை திருநாளின் 6 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு வேணுவனநாதரின் கருவறையில் உள்ள மனோன்மணியின் உற்சவ திருமேனியை வெளியே எடுத்து வந்து சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வேணுவனநாதா், மனோன்மணி அம்பாள் திருமணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தீா்த்தவாரி: ஏழாம் திருநாளான வெள்ளிக்கிழமை (டிச.17) காலை 9 மணிக்கு தீா்த்தவாரியும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து மனோன்மணி அம்பாள் உற்சவா் திருமேனி ஈசனை பிரியாதிருக்க மீண்டும் கருவறைக்குள் கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.