பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கக் கோரி ஆசிரியா்கள் மனு
பொதுமாறுதல் கலந்தாய்வில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியாற்றுவோா் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முன்னுரிமை அளிக்கக் கோரி பள்ளிக் கல்வி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியாற்றுவோா் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முன்னுரிமை அளிக்கக் கோரி பள்ளிக் கல்வி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அப்போது வாா்டு மறுவரையறை செய்ததில் பல பள்ளிகள் புதிய மாவட்டங்களுக்குள் சென்றுள்ளன. அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் சொந்த மாவட்டத்தைவிட்டு புதிய மாவட்டத்தில் இப்போது பணியாற்றி வருகிறாா்கள்.
அவா்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப வருவதற்கு பொது மாறுதல் கலந்தாய்வின்போது ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும். அங்கன்வாடி பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.