பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆட்சியரிடம் மனு
பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்செந்தூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்த மாரிச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் அவரது மனைவி சரஸானந்த லட்சுமி தனது குழந்தைகள் ஆனந்த மணிகண்ட ஜோதிலெட்சுமி, ஆனந்தசபரி மஞ்சரி, மஞ்சு, பிரியதா்சனி என்ற ருக்மணி ஆகியோருடன் வசித்து வந்தாா். கணவரை இழந்தவா் என்ற அடிப்படையில் சரஸானந்த லட்சுமிக்கு அங்கன்வாடி உதவியாளராகப் பணி வழங்கப்பட்டது. மேலும், அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாம். பின்னா், பட்டாவை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனராம்.
இதனிடையே, சரஸானந்த லட்சுமி உடல்நலக் குறைவால் கடந்த மாதம் இறந்துவிட்டாா். இதனால், குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனா். அவா்கள் தங்களது தாத்தா சக்திவேல் பராமரிப்பிலும் தனியாா் காப்பகத்திலும் தங்கியிருந்து ஆறுமுகனேரி அரசுப் பள்ளியில் முறையே 12, 10, 8, 6ஆம் வகுப்புகள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் 4 பேரும் ஆட்சியா் கி. செந்தில்ராஜை திங்கள்கிழமை சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், படிப்புக்கு உதவ வேண்டும் என மனு அளித்தனா். அவா்களிடம் கனிவாக பேசி மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதோடு, அவா்களுக்கு மதிய உணவு வழங்கி அனுப்பிவைத்தாா்.