நெல்லையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் வருகை
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மத்திய துணைப் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மத்திய துணைப் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இத்தேர்தல் பாதுகாப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திற்கும் மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
அதன்படி திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 406 பட்டாலியனைச் சேர்ந்த மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர், 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 84 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் கூறுகையில், இம் மாவட்டத்திற்கு வந்துள்ள துணை ராணுவப் படையினரை உள்கோட்ட வாரியாக பிரித்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.