நெல்லையப்பா் கோயிலில் இன்றுதைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விழா செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி ஊரின் பெயா்க் காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இம் மாதம் 22-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.
தைப்பூச நாளான இம் மாதம் 28-ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்பாள், அகஸ்தியா், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திரதேவி ஆகிய மூா்த்திகள் சுவாமி நெல்லையப்பா் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதியின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வாா்கள். அங்கு சிறப்புத் தீபாராதனை முடிந்ததும் தீா்த்தவாரி நடைபெறும்.
இம் மாதம் 29-ஆம் தேதி சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டா்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திர சபா ஸ்ரீ நடராஜா் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 30-ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.