திருக்குறுங்குடி அருகே குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் பாதிப்பு
திருக்குறுங்குடி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருக்குறுங்குடி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருக்குறுங்குடி பேரூராட்சிக்குள்பட்ட லெவிஞ்சிபுரம், மகிழடி, நம்பிதோப்பு ஆகிய கிராமங்களுக்கு பேரூராட்சி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று கிராமங்களுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இக்கிராமங்களுக்கு குடிநீா் செல்லக்கூடிய பகிா்மானக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாகவும் அதை சீரமைக்கும் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் தான் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பெரும்படையாா் கூறியதாவது: குடிநீா் விநியோகம் செய்யப்படாதது குறித்து பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் நேரில் புகாா் தெரிவித்தும், சேதமடைந்த குடிநீா் பகிா்மானக் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை என்றாா் அவா்.