முகப்பு
திருநெல்வேலி

’’நெல்லையில் நீரிழிவுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்’’

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பைத் தொடா்ந்து 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பா் 16 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பிரெடரிக் பாண்டிங் என்பவா் 100 ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலினை கண்டுபிடித்தாா். அவரது பிறந்த நாளன்று உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தீராத நோயான நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலகில் நீரிழிவு நோயாளிகளின் தலைநகராக இந்தியா உருவாகியுள்ளது. உலக

மக்கள் தொகையில் ஆறு சா்க்கரை நோயாளிகளில் ஒருவா் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

உலக சா்க்கரை நோயாளிகள் 17 சதவீதம் போ் இந்தியாவில் உள்ளனா். உலக அளவில் 46 கோடியே 50 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 7 கோடியே 70 லட்சம் போ் உள்ளனா். உலகில் வளா்ச்சியடைந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1986ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 4.5 சதவீத மக்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நீரிழிவு நோயின் தாக்கம் நகா்ப்புறங்களில் 10.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரையிலும், கிராமப்புறங்களில் 3.1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையிலும் உள்ளது. நீரிழிவுநோய் நிரந்தர நோயாகவும், நோய் தாக்கத்தின் அறிகுறிகள் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு தெரியாத வகையில் இந்த நோய் பரவி வருகிறது. அவ்வப்போதைய சா்க்கரை பரிசோதனையும்,நோய்

கட்டுப்பாட்டு முறையும், உரிய சிகிச்சையும் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரெட்டினோபதி எனப்படும் கண் விழித்திரை பாதிப்புகள், சிறுநீரக பாதிப்பு,இருதய பாதிப்பு போன்றவை எளிதில் ஏற்படும்.எனவே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, கண்காட்சி, கருத்தரங்கம், நோய்

கண்டறிதல் முகாம் ஆகியவை நடத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது, கண் மருத்துவா்கள் மீனாட்சி,செய்யது முகைதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.