முகப்பு
தற்போதைய செய்திகள்

கூட்டணியைக்கூட அமைக்க முடியாத காங்கிரஸில் முதல்வருக்கு போட்டி? - முதல்வர் ரங்கசாமி விமர்சனம்

கூட்டணி கட்சியையும், தன்னுடைய கட்சியினரையும் ஏமாற்றியவர் தான் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் என முதல்வர் ரங்கசாமி விமர்சினம் குறித்து...

Updated On : 28 மார்ச், 2026 at 6:27 AM
புதுப்பேட்டை பகுதியில் திறந்த வேனில் நின்று கொண்டு பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் ரங்கசாமி
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சியையும், தன்னுடைய கட்சியினரையும் ஏமாற்றியவர் தான் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம். யார் முதல்வர் என்ற போட்டி அந்த கட்சியில் நிலவி வருவதால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி விமர்சித்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த கூட்டணி சாா்பில் மீண்டும் முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கசாமி, தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுகிறாா். இதனால், இந்தத் தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட புதுப்பேட்டை பகுதியில் உள்ள புத்துளாய் மாரியம்மன் கோயிலில் முதல்வா் ரங்கசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா். அப்போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் மாலை, சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் நின்று கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, கடந்த பேரவைத் தேர்தலிலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பொறுப்பேற்று புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகின்ற வாய்ப்பினை கொடுத்ததற்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

சொந்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அடிக்கடி வரவில்லையே என்று தாய்மார்கள், பெரியோர்களுக்கு கொஞ்சம் வருத்தம் உள்ளது. ஆனாலும் நான் புதுச்சேரியில் இருந்துகொண்டு மாநில மக்களுக்கும், தொகுதி மக்களுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அது உங்களால் தான். அந்த பெருமை உங்களையே சேரும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை.

மேலும், தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய 3 தொகுதிகளையும் நான் ஒன்றாக இணைத்து பேசுவது வழக்கம். இந்த தேர்தலில் கட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு மீண்டும் வெற்றியை தந்து புதுச்சேரி மாநில வளர்ச்சியில் மீதம் இருக்கின்ற பணிகளை செய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

இந்த தொகுதியில் அசோக் ஆனந்த் மீண்டும் வருவார். விரைவில் போட்டியிடுவார், வெற்றி பெறுவார். வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது என பேசிய முதல்வர் ரங்கசாமி, தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு தான் நம்முடைய அரசு. இந்த தேர்தல் சமயத்திலும் புதிதாக வாக்குறுதிகளை கொடுப்போம். அதை நிறைவேற்றும் அரசாகத்தான் இந்த அரசு வரும்.

ஆனால், இங்கு ஒருவர் மக்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள்தான் ஆகின்றன. அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. அவா் எதற்காக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வந்தாா் என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளே போட்டி நிலவுகிறது. காங்கிரஸால் கூட்டணியைக்கூட சரியாக அமைக்க முடியவில்லை.

திமுக வேட்பாளா் நிற்கும் இடங்களில் அக்கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது. காங்கிரஸ் கூட்டணியில் யாா் முதல்வா், யாா் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பம், போட்டி நிலவுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனா் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் சலீம் சொல்லியிருக்கிறார். கூட்டணி கட்சியையும், தன்னுடைய கட்சியினரையும் ஏமாற்றிவிட்டார். அது அவர்களுக்கு எவ்வளவு வேதனையை கொடுக்கும். காங்கிரஸ் கட்சியிலேயே நியாயம் இல்லை. அப்படியானால் கூட்டணி கட்சிக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? அப்படிப்பட்டவர்தான் இந்த பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே, வாக்காளா்கள் சிந்தித்து பாா்த்து வாக்களிக்க வேண்டும் என்றாா் ரங்கசாமி.

summary

A Congress that can't even form an alliance is a competition for the Chief Minister? - Chief Minister Rangasamy's criticism

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.