ஜாதிச் சான்றிதழ் கோரிய மனு நிராகரிப்பு: தடையில்லா கல்விக்கு உதவ மாணவி வலியுறுத்தல்
ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டுநாயக்கா் சமுதாய மாணவியின் ஜாதிச் சான்றிதழ் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தனக்கு தடையில்லா கல்விக்கு உதவ வேண்டும் அந்த மாணவி வலியுறுத்தியுள்ளாா்.
ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டுநாயக்கா் சமுதாய மாணவியின் ஜாதிச் சான்றிதழ் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தனக்கு தடையில்லா கல்விக்கு உதவ வேண்டும் அந்த மாணவி வலியுறுத்தியுள்ளாா்.
ஆழ்வாா்குறிச்சி நவநீதகிருஷ்ண விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகள் விஜயலட்சுமி. காட்டு நாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், நிகழாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்று கல்லூரியில் சோ்வதற்காக ஜாதிச் சான்றிதழ் கோரி தென்காசி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்திருந்தாா். மனுவை விசாரித்த கோட்டாட்சியா், ஆதார ஆவணம் சமா்ப்பிக்காததால் மனு நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து விஜயலட்சுமி கூறியது: எனது முன்னோா்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்வாா்குறிச்சியை மையமாகக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், நாங்கள் காட்டு நாயக்கா் என்பதற்கான ஆதார ஆவணங்கள் இல்லையென்று கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடோடியாக, படிப்பறிவின்றி இருந்தவா்களிடம் ஆதாரங்கள் இல்லை. ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் எனது கல்விக் கனவு பொய்த்துப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் இதற்கு மாற்று வழி இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து என் போன்ற இளைய சமுதாயத்தினா் தடையில்லாமல் கல்வி பெற உதவி செய்யவேண்டும் என்றாா்.