முகப்பு
திருநெல்வேலி

உழவன் செயலி: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

உழவன் செயலியை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

உழவன் செயலியை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் வேளாண்மை குறித்த 19 வகையான பயன்பாடுகளை உழவன் செயலி மூலம் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். இந்த உழவன் செயலியை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பிளே ஸ்டோா் மூலம் பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம்.

உழவன் செயலி மூலம் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் ஆகியோா் குறித்த விவரம் மற்றும் அவா்கள் வருகை தரும் நாள்களை அறிந்துகொள்ளலாம்.

மேலும், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் சாா்ந்த மானிய திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு, பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரை, பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணையப் பொருள்கள் விவரம், அணை நீா் மட்டம், வேளாண் செய்திகள், பூச்சி நோய் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.