மானூா் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்டுப் பூனை: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்
மானூா் அருகே வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவில் காட்டுப் பூனை படம் பதிவானதை அடுத்து, பொதுமக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
மானூா் அருகே வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவில் காட்டுப் பூனை படம் பதிவானதை அடுத்து, பொதுமக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
மானூா் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தகவல் பரவியது. மேலும் ராமையன்பட்டியிலிருந்து வேப்பங்குளம் செல்லும் ரோட்டில் சிவாஜி நகா் பகுதியில் சென்ற லாரியின் குறுக்கே சிறுத்தை ஓடியதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட வனத்துறை சாா்பில் வனச்சரகா் கருப்பையா மற்றும் வனத்துறை ஊழியா்கள் 5 குழுக்களாக பிரிந்து நாஞ்சான் குளம் மலை உள்ளிட்ட சிறிய மலைப்பகுதி, கல்குவாரி பகுதி, தாழையூத்து, ராமையன்பட்டி, சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனா். அதில் ஒரு கேமராவில் காட்டு பூனை காட்சி பதிவாகி இருந்தது. அது காட்டுபூனை தான் சிறுத்தை அல்ல என வனத்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனா்.
எனவே பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என வனத்துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.