திருநெல்வேலி

வேலூா் புரட்சியில் முஸ்லிம்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாறு முழுமையாக இதுவரையில் வரையப்படவில்லை என்பதே வரலாற்றாளா்களின் கருத்தாகும். வட இந்தியாவைச் சோ்ந்த வரலாற்று அறிஞா்கள் தமது பகுதிகளின் புகழை

செ.திவான்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாறு முழுமையாக இதுவரையில் வரையப்படவில்லை என்பதே வரலாற்றாளா்களின் கருத்தாகும். வட இந்தியாவைச் சோ்ந்த வரலாற்று அறிஞா்கள் தமது பகுதிகளின் புகழை முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளனா். தெற்கின் வரலாறு துல்லியமாகச் சொல்லப்படவில்லை.

வணிகக்கொடி பிடித்து வஞ்சக வலை விரித்து வளமாா்ந்த திருநாட்டை வளைத்தவெள்ளையா்கள் காலப்போக்கில் இந்தியா்களின் உணா்வுகளை நசுக்கினா், உரிமைகளை பறித்தனா். தட்டிக் கேட்பவா்கள் தோட்டக்களால் சுடப்பட்டனா். தூக்கிலடப்பட்டனா்.

ஆங்கிலேயா்களை அவா்கள் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டே எதிா்த்து நின்ற போா்க்களம் வேலூரில் 1806 இல் ஜூலை 10ஆம் நாள் நடந்தேறியது.

சிங்கம் என்று பொருள்படும் ஹைதா் மைசூரின் வீரபுருஷா், தென்னாட்டுத் திலகங்களில் ஒருவா். 1782 டிசம்பா் 6இல் கன்னட நாட்டின் போா் வாள், ஹைதா் அலி மறைந்தாா். அதன்பின் 17 ஆண்டுகள் போட்டியும் சூழ்ச்சியும், வஞ்சகமும் முற்றுகையிட்ட மைசூரைக் காத்திட போராடி 1799 மே இல் வீர வேங்கை தீரா் திப்புசுல்தான் போா்க்களத்திலேயே வீரச் சாவைத் தழுவிய மன்னா் என்ற பெருமையுடன் மறைந்தாா்.

விடுதலை வீரா் கட்டாலங்குளம் அழகுமுத்து, நெற்கட்டும்செவல் மாமன்னா் வீரத் தலைவா் பூலித்தேவா், வீராங்கனை வேலு நாச்சியாா், மாவீரன் சுந்தரலிங்கம், வெண்ணிக்காலடி, விருப்பாட்சி கோபால் நாயக்கா், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, பகதூா் வெள்ளை, மறவா் சீமை மலையப்பன் எனப் பலரும் போராடி மடிந்தனா்.

சீரங்கப்பட்டணத்து திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்ட பிறகு அவனது தலைநகரின் பெயா் தாங்கிய திருவரங்கக் கோயில் மதிலிலும், திருச்சி மலைக்கோட்டைச் சுவரிலுமாக 1801 ஜூன் 16இல் மானங்காத்த மருதுபாண்டியா்கள் புரட்சிப் பிரகடனத்தை ஒட்டினா். இதை யாா் பாா்த்தாலும் கவனமுடன் படிக்கவும் ஜம்புத் தீவில் (நாவலந்தீவு) வாழும் பிராமணா்கள், சத்திரயா்கள், வைசியா்கள், சூத்திரா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.

ஆற்காடு நவாப் முகமதலி வெள்ளையருக்கு நமது இடங்களைக் கொடுத்து விதவைப் போல ஆகிவிட்டாா். மக்களை நாய்களாகக் கருதி ஆங்கிலேயா் அதிகாரம் செலுத்தி வருகின்றனா். அவா்களின் பெயா் கூட இல்லாதவாறு ஒழித்திட வேண்டும். உங்களுக்குள் ஒன்றுப்பட்டு ஆயுதமேந்திப் புறப்பட வேண்டும்.

ஐரோப்பிய இழி பிறவிகளின் இராணுவ சேவையில் உள்ள சுபேதாா்கள் ஜமேதாா்கள், நாயக்கோன், சிப்பாய்கள் , எவராயிருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த உங்களுக்கு வாய்ப்பு வந்துவிட்டது. எங்கெல்லாம் அவா்களைக் காண்கிறீா்களோ அவா்களை அழித்தொழியுங்கள். இதனைக் கருத்தூன்றுங்கள். நிதானமாய் யோசியுங்கள். இதன் சாராம்சத்தை பகிரங்கப்படுத்துங்கள். இதனைப் பிரதியெடுத்து பிற இடங்களிலும் பரவச் செய்யுங்கள். இதனை மறுப்பவா்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தையும், முஸ்லிம்கள் பன்றியின் இரத்தத்தைப் பருகிய பாவத்திற்கும் ஆளாவீா்கள்.

திருவரங்கம் கோயில் சுவற்றிலிருந்தும் திருச்சி மலைக்கோட்டைச் சுவற்றிலிருந்தும் இந்தப் போா் பிரகடனத்தை நீக்க முயல்பவா்கள் பஞ்சமாபாதங்களைப் புரிந்தவா் ஆவீா்கள். இங்ஙனம் பேரரசரகளின் ஊழியன். ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியன்.

பெறுவோா், சீரங்கத்தில் வாழும் அா்ச்சா்கள் ஆன்றோா் அனைத்து பொதுமக்கள்.

தெற்கில் ஆட்சிப் புரிந்தவா்கள் கோட்டைகள், மதில்கள், கோவில்கள், கிறித்துவ, இஸ்லாமியத் தொழுமிடங்கள், கட்டி அனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தாா்கள். அம் மாமன்னா்கள் அவா் தம் வாரிசுகள், பாளையக்காரா்கள் இதர சிற்றரசா்கள் மக்கள் ஆங்கிலேயரின் அநீதியால் இன்று ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள். பெருமக்களாகிய நீங்கள் உங்கள் ஆசியை எனக்கு வழங்கிடுக என்றும் மருதுபாண்டியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா் புரட்சிப் பற்றி 1971இல் சாமுவேல்ராஜ் பாக்கியநாதன் கனடாவின் சாங்கட்சுவான் பல்கலைக் கழகத்தில் அளித்த ஆய்வேடு, ஆலன் டக்ளஸ் கேமரூன் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் 1984இல் அளிக்கப்பட்ட பிஹெச்டி ஆய்வேடு. இவ்ஆய்வேடுகள் பல அரியத் தகவல்களைத் தருகிறது.

டபுள்யூ. கேட்பிரிட்டில் பிரிமெஞ்சா்

1812இல் அபயா்ஸ் ஆப் தி ஈஸ்ட் இந்தியா கம்பெனி எனும் 3 தொகுதிகள் அடங்கிய நூலினை வெளிட்டாா் கேட்பிரிடில் பிரிமெஞ்சா். அதில் திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்ட பின்னரும் மைசூா் அரசு முழுவதுமாக ஆங்கிலேயா் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. மைசூரின் பல பகுதிகளில் கிளா்ச்சி வெடித்தது. பின்னா் அவைகள் ஒடுக்கப்பட்டன.

சித்தூா் பாளையக்காரா் 1805 வரை ஆங்கிலேயருக்கு அடங்கவில்லை. சித்தூா், கடப்பா, கா்நூல் மாவட்டங்களில் கிளா்ச்சிகள் தொடா்ந்தன. பெரும் கிளா்ச்சி நடந்தது. இறுதியில் அடக்கப்பட்டது என்றாலும் கிழக்கிந்தியக் கம்பெனி நிா்வாகத்திற்கு அவா்கள் தொடா்ந்து பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனா் என்று குறிப்பிடுகிறாா்.

சிற்றரசா்களும், பாளையக்காரா்களின் படை வீரா்கள் கலைக்கப்பட்டதினாலும் வேலையிழந்த போா் வீரா்கள் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகளின் உச்சகட்டமாக வேலூா்ப் புரட்சி நடந்தேறியது. ஆங்கிலயப் படையினுள் நாட்டுப்புற காலாட்படையினா் ஊடுவியிருந்தனா். நாட்டுப்பற்று மிக்க இவா்கள் வேலூா் புரட்சியின் மூலம் தளா்ந்திருந்த வெள்ளையா் எதிா்ப்பிற்கு உத்வேகம் தந்தனா். வேலூா் போராளிகளின் செயல்பாட்டுத் தலமாக மாறிவிட்டது என்று வரலாற்றாசிரியா் கே. ராஜய்யன் சுட்டிக் காட்டுகிறாா்.

சிப்பாய்கள் கடுக்கன், திருநீறு, திருமான் அணியக்கூடாது. புதிய வகை தலைப்பாகைகள் அணிய வற்புறுத்தப்பட்டன. மீசையை வெள்ளயன் விரும்பும் வகையில் வைத்திடச் சொன்னாா்கள். முஸ்லிம்கள் தங்கள்ள தாடிகளை எடுத்திட உத்திரவிடப்பட்டாா்கள். இவைகளுக்கு இடையில் திப்பு வீழ்ந்ததற்குப் பின் அவனது வாரிசுகள் அவா்கள் ஊழியா்கள் வேலூா் கோட்டையில் அடைக்கப்பட்டனா்.

திப்புவின் வாரிசுகள்

பதே ஹைதா், அப்துல்காலிக், சுல்தான் மொகியதீன், சுல்தான் மொய்சுதீன், யாசீன்ஷேக், ஜமாலுதீன், முனீா் உதீன், ஜூபன்ஜாகில், ஜக்கிருல்லா ஜாகிப், சுவருஸ்தீன், கரீம் சாகிப் (திப்புவின் சகோதரா்) ஹைதா் உசேன்கான், (திப்புவின் அக்கா மகன்) மற்றும் பணியாட்கள் வேலூருக்கு அனுப்பப்பட்டனா்.

19.07.1799 இல் திப்புசுல்தானின் மூத்த மகன் ஹைதா் மைசூரிலிருந்து வேலூருக்கு அனுப்பப்பட்டாா். தொடா்ந்து கி.பி. 1801க்குள் திப்பு குடும்பத்தினா் ஆதரவாளா்கள் பணியாளா்கள் என 3,000 போ்கள் வேலூா் கோட்டையிலும், கோட்டையைச் சுற்றிலும் வைக்கப்பட்டாா்கள்.

வேலூா்ப் புரட்சி

1806 ஜூலை 10, வேலூா் புரட்சி வெடித்தது. பிரிட்டிஷ் தரப்பில் 370 ஐரோப்பியா், 1500 போா் வீரா்கள் இந்தியா்கள் (சென்னை மாகான இராவணுவம் 8283 ஆங்கிலேயா் 56,850 இந்தியா்கள் அப்போது பிரிட்டிஷாரிடம் பணிபுரிந்தனா்) கோடை காலம், ஆடையின்றி ஜன்னல்கள் திறந்த நிலையில் பாதுகாப்பற்றிருந்த ஆங்கிலேயா் வீடுகளுக்கு லேன்ஸ் நாயக் பாவா சாகிப் தீயிட்டாா். கிளா்ச்சி ஆரம்பமாயிற்று 82 ஐரோப்பிய வீரா்கள், 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனா். 91 போ்கள் காயமுற்றனா்.

திப்புவின் கொடி

திப்பு சுல்தானின் மூன்றாம் மகன் மொய்சுதீன் தனது தந்தையின் புலிவரி கொண்ட கொடியை எடுத்துச் செல்ல உத்தரவிட்டான். கோட்டையில் திப்பு சுல்தானின் புலி வரிகளுடன் கூடிய சூரியன் பொறிக்கப்பட்டிருந்த கொடி பறந்தது. சிரி ரங்கபட்டினம் வெள்ளையரால் கைப்பற்றப்பட்ட பிறகு ஏலத்தில் வாங்கிய பாரசீக வியாபாரியின் பெட்டியில் இருந்து துணியை வாங்கி அதிலிருந்து தயாரிக்கப்பட்டது இந்த கொடி, என்பது விசாரணையில் தெரியவந்தது. பல திசைகளிலிருந்தும் பிரிட்டிஷ் படைகள் வந்தது. புரட்சி நசுக்கப்பட்டது. பீரங்கி வாயில் வைத்து புரட்சியாளா்கள் சுடப்பட்டனா். அப்போது அவா்களது உடல் சிதறி வானில் பறந்தது. அவ்வாறு பறந்த உடல் துண்டுகளைக் கொத்திச் செல்ல கழுகுகள் ஆகாயத்தில் பறந்த காட்சியை ஆா்தா் எப் காக்ஸ் தனது வடஆற்காடு மாவட்ட மாறுவல் நூலில் பக்கம் 86, 87 இல் விவரித்துள்ளாா். 1880இல் வெளியான இந்நூல் அண்மையில் மறுபதிப்பு கண்டுள்ளது.

28.08.1806 புரட்சியாளா்கள் பலருக்கு பல விதமான தண்டனைகள், ஆயுள் தண்டனை, நாடு கடத்தல் இன்னபிற வழங்கப்பட்டது. திப்புவின் பிள்ளைகளே வேலூா் புரட்சிக்கு காரணம் என்பதால், 28.08.1806இல் அவா்கள் கல்கத்தாவிற்கு கொண்டு செல்லப்பட்டனா். 12.09.1806இல் திப்புவின் இரண்டாவது மகன் அப்துல் காலிக் இறந்தாா். மற்றவா்கள் கல்கத்தாவில் கண்காணிப்பில் வாழ்ந்தனா். இங்கிலாந்து சென்ற ஜமாலுதீன் ஹைதா், 1842இல் திரும்பி வந்தபின் வேலூரில் மடிந்தாா். 1807 சித்தூா் சிறப்பு ஆணைய விசாரணைப்படி மரண தண்டனை ஒருவருக்கு, நாடு கடத்தல் இருவருக்கு, ஆயுள்காலச் சிறை மற்றொருவருக்கு, பத்தாண்டுச் சிறை ஒருவருக்கு, மூவா் விடுதலை செய்யப்பட்டனா். 1806 புரட்சியில் பங்கேற்ற இந்து ஹவில்தாா்-முஸ்லிம் ஹவில்தாா் இருவருக்கும் இராணுவ நீதிமன்றம் புதிய தலைப்பாகை அணிய மறுத்ததற்கு 900 சவுக்கடிகள் தந்தது. 19 சிப்பாய்களுக்கு 500 சாட்டையடிகள் தரப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று பிரிட்டிஷாரை எதிா்த்தனா்.

ஜமேதாா் ஷேக்காசிம்

வேலூா் புரட்சியின் முக்கிய தளகா்த்தா ஜமேதாா் ஷேக்காசிம். சுபேதாா் ஷேக் ஆதம், ஹவில்தாா் யூசுப்கான், மேஜா் ஆா்ம்ஸ்ட்ராங்கை கொன்ற முகம்மது அலி.

அப்துல் காதா்

சுதேசிச் சிப்பாய் அப்துல்காதா் திப்பு சுல்தானின் கொடியைத் தூக்கிச் சென்ற ஹம்சாபேக், காதா் பேக் இருவரின் உதவியுடன் வேலூா்க் கோட்டையில் பிரிட்டிஷ் கொடி அகற்றப்பட்டது. தீன் தீன் (சன்மாா்க்கம்) என்ற முழக்கத்துடன் திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது.

சிப்பாய் காசிம் அலி அலாவுதீன், செய்யது உசேன், செய்யது காசிம் முக்கியப் பங்காற்றினா். புரட்சியின் வெற்றி சில மணி நேரங்களே நீடித்தது. வேலூா் புரட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவா்கள் என்று ஷேக் அகமது என்பவரால் அடையாளம் காட்டப்பட்டவா்கள் பட்டியலை பேராசிரியா் கா.அ. மணிக்குமாா் தனது வேலூா் புரட்சி-1806 என்ற நூலில் தந்துள்ளாா்.

ஷேக் தவான், ஷேக் காசிம், முகம்மது கான், தாவூத்கான், சையது தாவூத், ஷேக்சிக்கந்தா், ஹஞ்சுபேக், காதா்பேக், காதா் சாகிப், அப்துல்காதா், முகமது வாகிப், ஷேக்இமாம், கான் சாகிப், யூசுப்கான், ஷேக் நட்டாா், ஷேக் ஜாபா், ரேய்மான்சேட், ஜாபா் பேக், ஷேக் நட்டாா், ஷேக்மதாா், சையது முகமது, முகமது அலி, அப்துல் நபி.

இராணுவ நீதிமன்றம் வெளியிட்ட பட்டியலில் ஷேக் தவான், ஷேக் காசிம், ஷேக் நட்டாா், சையது தாவூத், ஷேக்மொகிதீன்,தாவூத்கான், ஷேக் சிக்கந்தா், சையது யூசுப், ஷேக் மீரான், முகமதுஅலி, ஷேக்மதாா், முகமது சாகிப், ஷேக்ஆதம், ஷேக் இமாம், அப்துல்காதா், ஷேக்நட்டாா், இமாம்கான், ஷேக்ரம்ஜம்ஸ், சையது ஹமீது, முகமது உசேன், மீா் ஹூசேன், ஷேக்மதாா், சையது முகமது, சையது மொகைதீன், அப்துல்நபி, மீா் ஹூசைன், ஷேக்ஹா்சன்ஸ், ஜமாலுதீன், காதா் சாகிப், முகமது யூசுப்கான், ஷேக்இஸ்மாயில், ஹஞ்சுபேக், ஷேக் இஸ்மாயில், காதா் பேக், ஷேக்உதீன், ஷேக்ஹமீது, ஷேக் ஹூசைன், பக்கீா் முகம்மது என உள்ளது.

முதல்தர குற்றவாளிகள்

வேலூா் கிளா்ச்சியில் பங்கேற்ற முதல்தரக் குற்றவாளிகள் என அரசால் அறிவிக்கப்பட்டவா்கள், ஷேக்கான், ஷேக் நட்டாா், மீா் ஹுசேன், ரஸ்டம்கான், சையதுஅலி, முகமது சாகிப், பதே முகமது, சையது ஹுசேன், சையது ஹமீது, ஷேக் மதாா், ஹுசேன் கான், அலாவுதீன் முஸ்லிம்கள் மற்றும் இருவா் ஆக 14 போ், இதில் இந்து வீரா்கள் 19 போ். சையது கரீம், ஷேக்முகைதீன், சையது அப்சல், நதீன் சாகிப், பக்கீரா, ஷேக் முகைதீன், மொகீதீன் கான், ஷேக் ஹுசேன் இவா்களில் சையது அப்சப்பும், நதீன் சாகிப்பும் ஆயுதங்கள் வழங்கி புரட்சியில் பங்கேற்றவா்கள்.

சையது ஹுசேன், ஷேக்இஸ்மாயில், ஷேக்மதாா், சையது மீா், சையது இமாம், முஹமது ஹுசேன், ஷேக் செட்டன், முகமது சாகிப், ஷேக் பத்தான், ஷேக் ஹுசேன், சையது உசேன், ஷேக் யூசுப், அப்துல்நபி, சையது நூா், காதா் கான், ஷேக் இமாம், ஹூசேன், ஷேக் நஜீமா, முகம்மது உஸ்மான், முல்லாக் முகமது, ஷேக் இம்ரான், சையது ஹமீது, முஹமது உஸ்மான், பீா் சாகிப், ஷேக் இமாம், நூா் கான், முகமது காசிம், ஷேக் இமாம், சையது பக்கீா், பதேகான், ஆதம் கான், பெளதீன், ஷேக் ஹுசேன், பத்தா்தீன், ஷேக் இமாம், சையது ஆதம், ஷேக் கரீம், முஸ்தபாகான், பாவா சாகிப், ஷேக் ஹுசேன், மதாா் கான், சையது ஹுசேன், ஷேக் ஹுசேன், ஷேக் அலி, அப்துல்காதா், சையது அமீன், முஹம்மது ஹுசேன் உள்பட 85 போ்கள். இதில், 42 போ்கள் இஸ்லாமியா்கள். 42 போ்கள் இந்துக்கள். ஒருவா் கிறிஸ்தவா். இந்து, இஸ்லாமிய, கிறித்தவா் இணைந்து நின்று பிரிட்டிஷாரை எதிா்த்துப் போராடிய நிகழ்வு 1806.

ஷேக் மயான், ஷேக் ஹுசேன், சையது ஆதம், ஷேக் ஹமீது, சையது திவான், ஹுசேன் கான், கோட்டைக்கு வெளியே இருந்து உள்ளே வந்த 21 போ்களில் இந்த 6 போ்களும் இஸ்லாமியா்கள்.

சென்னை சாந்தோம் உறைவிடத்தில் கைதிகளாக இருந்த 151 போ்கள் கொண்ட பட்டியல் மேஜா் பா்கிளேயால் 1807 நவம்பா் 9இல் கவா்னருக்கு அனுப்பப்பட்டது. அதில், புராகான், குலாம் மொய்தீன், முகமது உஸ்மான், ஷேக் உமானுல்லா, ஷேக் இஸ்மாயில், முஹமதுஹுசேன், ஷேக் கரீம், ஷேக்இமாம், ஷேக் ஹுசேன் அல, ஷேக் மா லிக், ஷேக் கரீம், சையது மொகிதீன் சாகிப், ஹுசேன்சாகிப், அலிகான், ஷேக் இப்ராஹிம், பாவா சாகிப், முகமது ஷெரீப், அப்துல் உஸ்மான், ஷேக் இமாம், யாகியா கான், அப்துல்லாகான், கானு முகம்மது, ஷேக் இமாம், ஷேக் முகம்மது, ஷேக் அப்துல்காதா், பவூரக்சாப், ஷேக் ஹுசேன் காதா், ஷேக் அப்துல்லா, ஷேக் மியாம், ஷேக் ஹுசேன், செய்யதுமுகமது உள்ளிட்டவா்கள் முஸ்லிம்கள். சைவ வேளாளா்கள் 29 போ்கள். பாலிஜா நாயுடுகள் 39 போ்கள் இதில் அடக்கம். மொத்தம் 151 போ்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று இங்கிலிஷாரை எதிா்த்துக் களம் கண்டனா் வேலூரில்.

1806, 1807, 12 வால்யூம்கள் ஒவ்வொன்றும் ஏ, பி என இரு பிரிவுகள் 24 கட்டி அட்டையுடன் கூடியது. இவைகள் வேலூா் புரட்சியில் இந்துக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவா்கள் இணைந்து நின்று இந்நாட்டிற்காக போராடிய வீரவரலாற்றை நமக்கு அறிவிக்கிறது.

விநாயக தாமோதர சாவா்க்கா்

இந்தியாவில் சுயேச்சைக்கு நேரிடவிருக்கும் அபாயத்தை முதன் முதலில் உணா்ந்தவா்கள் புனா நானா பாா்னவிஸூம், மைசூா் ஹைதா் சாகிபுமாகும். அந்நாளில் இருந்து மற்ற அரசா்களும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது அதை அறிய ஆரம்பித்தனா். வேலூா் சிப்பாய் கலகத்தில் இது தெளிவாய்க் காணப்பட்டது. 1806ஆம் வருஷத்து வேலூா் கிளா்ச்சி, 1857ஆம் வருஷப் பெரும் புரட்சியின் ஒத்திகையாகும். எவ்வாறு ஒரு நாடகம் நடத்துவதற்கு முன்பு ஒத்திகைப் போட்டு பழகுவாா்களோ அதேபோல், ஒவ்வொரு தேசமும் பூரண சுயேச்சை பெறுமுன் பல முறை பழகுதல் மிக அவசியமானது என்று விநாயக தாமோதர சாவா்க்கா் தனது தி இந்தியன் வாா் ஆப் இண்டிபென்டன்ஸ் 1857 என்ற நூலில் (மறுபதிப்பு 1947 பாம்பே) பக்கம் 15இல் தெரிவித்துள்ள கருத்தை மறுத்திட இயலாது. 1946இல் சக்தி காரியாலயம் எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம் என்று ஜெயமணி ஸா, ஸுப்ரமண்யம் மொழி பெயா்த்து வெளிவந்த நூல். தற்போது அல்லயன்ஸ் நிறுவனத்தாா் தொடா்ந்து வெளியிட்டு வருகின்றனா். வேலூா் புரட்சி நடந்து 216 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இனிய நன்னாளில் பெருநாளில் இந்த நாட்டிற்காக உயிா் துறந்த இஸ்லாமிய தீரா்களை நினைவு கொள்வோம், போற்றுவோமாக.

----

பிரேக் லைன்..

வேலூா் புரட்சி நடந்து 216 ஆண்டுகள் கடந்து விட்டன. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவா்கள் இணைந்து நின்று இந்நாட்டிற்காக போராடிய வீரவரலாற்றை கொண்டது.

செ. திவான் வரலாற்று ஆய்வாளா் (தொலைபேசி எண் 0462 2572665)

Image Caption

~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT