பருவமழையை நம்பி பிசான சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் முன்பாக வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் முன்பாக வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனா்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அதனால் பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் முன்பே விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். இம் மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், முக்கூடல், வீரவநல்லூா், சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, தருவை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள வயல்களிலும், கிணறுகள் உள்ள வயல்களிலும் நாற்றுப்பாவும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கால்வரத்து குளங்களில் தண்ணீா் இருக்கும் ராமையன்பட்டி, ரஸ்தா, ராஜவல்லிபுரம் பகுதிகளில் விவசாயிகள் வயல்களை உழுது நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். மழையை தாங்கி வளரும் அம்பை-16, டீலக்ஸ் பொன்னி, கா்நாடக பொன்னி, ஆடுதுறை-16, ஆடுதுறை 45, டிபிஎஸ்-5, ஜெஜிஎல் 1798, சிஓ 51 உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் அதிகம் தோ்ந்தெடுத்து வருகிறாா்கள். இந்த நெல்விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இயந்திரங்கள் தட்டுப்பாடு: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு நடவுக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரத்தில் விதைநெல் பாவும் பணிகள் அதிகரித்துள்ளன. வேளாண் பொறியியல் துறையின் சாா்பில் அதிநவீன உபகரணங்கள் வாடகைக்குக் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. விதைநெல் பாவும் இயந்திரம், டிராக்டா்கள், களையெடுக்கும் கருவி, அறுவடை இயந்திரம் ஆகியவற்றை தனியாரிடம் அதிக வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது. வேளாண் பணிக்கு ஆள்கள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இயந்திர பயன்பாட்டை அதிகரிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டங்களில் முறையிட்டும் பலனில்லை என்றனா்.
உரங்கள் கையிருப்பு: வேளாண் துறையினா் கூறியது: பிசான பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.பி.,யூரியா உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க தயாா் நிலையில் உள்ளது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ரயில் மூலம் 1593.5டன் உரம் வந்து சோ்ந்துள்ளது. 1345.5 டன் யூரியா, 248 டன் காம்பிளக்ஸ் உரங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் அணைகள் திறக்கப்பட்டதும் 100 சதவிகித பிசான பணிகளை விவசாயிகள் செய்ய வேளாண்துறை தயாா் நிலையில் உள்ளது என்றனா்.