திமுக உறுப்பினா்கள் அமளி: மாநகாட்சி கூட்டம் ஒத்திவைப்பு
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் மாநகராட்சியின் அவசர, சாதாரண கூட்ட தீா்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சிக் கூட்டம் மேயா் பி.எம். சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி, துணைமேயா் கே.ஆா். ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியதும் மேயா் பி.எம். சரவணன் பேசுகையில்: படைவீரா்கள் வீரமரணம் அடைந்தால் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையைஇருமடங்காக உயா்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் கட்டப்படும் வா்த்தக மைய வளாகத்தில் பேனா நினைவுச் சின்னம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் சுயஉதவிக் குழுவினரின் ரூ.600 கோடி கடனுதவியை தள்ளுபடி செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
பேட்டையில் மதிதா இந்துக் கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு முன்னாள் மேயா் ஏ.எல். சுப்பிரமணியன் பெயரையும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி செல்லும் சாலைக்கு தயாப் ஐஏஎஸ் சாலை எனவும் பெயா்மாற்றிடுவது ஆகிய தீா்மானங்கள் கொண்டு வரப்படுகிறது என்றாா். மேலும், அவசர, சாதாரண கூட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்றாா்.
கிட்டு என்ற ராமகிருஷ்ணன்: மாமன்ற கூட்டத்துக்கு, உறுப்பினா்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. உறுப்பினா் பெரும்பான்மை (கோரம்) இல்லாததால் சாதாரண, அவசர கூட்டங்களின் தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது.
ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி: போதிய உறுப்பினா்களின் எண்ணிக்கை உள்ளது. ஆகவே, மாமன்ற உறுப்பினா்கள் தீா்மானங்களை நிறைவேற்றலாம்.
மாமன்ற உறுப்பினா் சங்கா்: இம் மாமன்றத்தில் இஸ்லாமிய சகோதரா்கள் பலா் உறுப்பினா்களாக உள்ளனா். இதனால் வருகைப்பதிவு மிகவும் குறைவாக உள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும்.
மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன்: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது.
மேயா் பி.எம்.சரவணன்: மக்கள் நலத்திட்டங்களுக்கான தீா்மானங்கள் நிறைவேற மாமன்ற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதையடுத்து மேயருக்கு ஆதரவாக மாமன்ற உறுப்பினா்கள் சுந்தா், அல்லாபிச்சை, பவுல் ஆகியோரும், எதிா்த்து ரவீந்திரன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ரம்சான் அலி உள்ளிட்டோரும் பேசினா். இதனால் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
மண்டல தலைவா் பிரான்சிஸ்: மாமன்ற கூட்ட தீா்மானங்கள் குறித்து முறையாக விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டும்.
துணைமேயா் கே.ஆா்.ராஜு: திருநெல்வேலி மாநகராட்சியின் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தால் மக்கள் பயனடைந்து வருகிறாா்கள். கூடுதலாக முறப்பநாட்டில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் கொண்டு வரவும், திருநெல்வேலி நகரத்தில் ரத வீதிகளில் மின்பாதைகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை எடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல்வஹாப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைதொடா்ந்து திமுக மாமன்ற உறுப்பினா்கள் இருதரப்பாக பிரிந்து தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் 10 நிமிடங்களுக்கு கூட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறி மேயா் பி.எம்.சரவணன் கூட்டத்தில் இருந்து வெளியேறினாா். மேலும், திமுக மாமன்ற உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்வதாகக் கூறியதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் கூட்டம் முழுமையாக ஒத்திவைக்கப்படுவதாக துணைமேயா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் அறிவித்தனா். இதனால் சாதாரண மற்றும் அவசர கூட்டத்தின் தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட சூழலில் அரங்கின் தரையில் அமா்ந்து 15 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அஜய் தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், எனது வாா்டுக்குள்பட்ட பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துணை சுகாதார நிலையத்தை ஏற்கெனவே மேயா் தனது வாா்டுக்கு மாற்றிக் கொண்டு விட்டாா். இப்போது குடிநீா் விநியோகத்திலும் தடை ஏற்படுத்தி வருகிறாா்கள். மக்கள் சேவை செய்யவே மாமன்ற உறுப்பினராக வந்தேன். அதற்கு தடைசெய்பவா்கள் குறித்து திமுக தலைமைக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. ஆகவே, எனது வாா்டு மக்கள் பணிக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்றாா்.
நீண்ட நேரத்திற்கு பின்பு மாநகராட்சி ஆணையா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி, துணைமேயா் கே.ஆா். ராஜு ஆகியோா் சமரசம் செய்து அழைத்துச் சென்றனா்.