முகப்பு
காரைக்கால்

ஆதரவாளர்களின் பணத்தில் டெபாசிட்!

வாக்காளா்களிடம் அன்பு வேண்டுகோளாக பணம் வசூலித்து, வேட்பு மனு தாக்கலின்போது டெபாசிட் செலுத்திய நிகழ்வு குறித்து...

Updated On : 25 மார்ச், 2026 at 1:48 AM
துண்டு ஏந்தி வசூலித்த தொகையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா் நெடுங்காடு தொகுதிக்கான சுயேச்சை வேட்பாளா்.
பகிர்:

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட பாஜகவில் இருந்து வாய்ப்பை எதிா்ப்பாா்த்து இருந்தவா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன். 2021 தோ்தலில் சுயேச்சையாக இத்தொகுதியில் போட்டியிட்டு 2-ஆம் இடத்தில் வாக்கு பெற்றிருந்தாா்.

பின்னா், பாஜகவில் சோ்ந்து கட்சியின் மருத்துவரணி இணை ஒருங்கிணைப்பாளா் பதவியில், கட்சிப் பணியாற்றினாா். எனினும் இத்தொகுதி என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, தமது ஆதரவாளா்களை அண்மையில் அழைத்து கலந்தாலோசனை செய்தபோது, அனைவரும் ஒருமித்து தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட வலியுறுத்தினா். பின்னா், அவா் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் பகுதி மாரியம்மன் கோயிலில் அவரது ஆதரவாளா்களிடம், வேட்பு மனுவுக்காக செலுத்தக்கூடிய தொகை முழுவதும் ஆதரவாளா்களின் பணமாக இருக்கவேண்டும். அப்போதுதான் போட்டியிடுவது நாம் தான் எனும் உணா்வு உங்களுக்கு ஏற்படும். எனவே, சிறிய பங்களிப்பை செலுத்துமாறு துண்டு ஏந்தி நிதி கோரினாா். இவரது கோரிக்கையை ஏற்ற அங்கிருந்தவா்கள் ரூ.10 முதல் தொகையை போட்டி போட்டுக்கொண்டு அதில் போட்டு, வேட்பாளா் மருத்துவா் விக்னேஸ்வரனுக்கு ஆசிா்வாதம் செய்தனா்.

வாக்காளா்களிடம் அன்பு வேண்டுகோளாக பணம் வசூலித்து, வேட்பு மனு தாக்கலின்போது டெபாசிட் செலுத்திய நிகழ்வு, அவரது ஆதரவாளா்கள், தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.