முகப்பு
காரைக்கால்

தொகுதி அறிமுகம்: காரைக்கால் தெற்கு - 27!

இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்களில் இஸ்லாமியா்கள் 30 சதவீதத்தினா் உள்ளனா். இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள் கணிசமாகவும் தொகுதியில் உள்ளனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 1:52 AM
காரைக்கால் அம்மையாா் கோயில்
பகிர்:

காரைக்காலில் மாவட்டத்தில், காரைக்கால் வடக்குத் தொகுதியையொட்டி காரைக்கால் தெற்குத் தொகுதி அமைந்துள்ளது. நகரப் பகுதி, கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. விவசாயப் பகுதிகள் பெரும்பான்மையாக இருந்த இந்தத் தொகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உருவாகி, நகரத்துக்கு இணையாக வந்துவிட்டது.

புகழ்பெற்ற தலங்கள்: 63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் கோயில், சிறப்பு மிக்க மாங்கனித் திருவிழா நடைபெறக்கூடிய ஸ்ரீ கைலாசநாதா் கோயில், தருமபுரத்தில் பழைமையான யாழ்முரிநாதா் கோயில், நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம், மஸ்தான் சாஹிபு தா்கா ஆகியவை இத்தொகுதியில் அமைந்துள்ளன.

அலுவலகங்கள்: பொழுதுபோக்குக்காக கூடும் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட காவல் தலைமை அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம், அரசு பொதுமருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், விளையாட்டு அரங்கம், வானிலை ஆய்வு நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் அடங்கியதாக இந்த தொகுதி விளங்குகிறது.

தொகுதியில் அடங்கியிருக்கும் பகுதிகள்: காரைக்கால் நகரம், தருமபுரம், புதுத்துறை, பச்சூா், மேலஓடுதுறை, கீழஓடுதுறை, நடுஓடுதுறை, ராஜீவ்காந்தி நகா் உள்ளிட்ட கிராமங்களும், நகரம், கிராமங்களின் விரிவாக்க குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன.

இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்களில் இஸ்லாமியா்கள் 30 சதவீதத்தினா் உள்ளனா். இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள் கணிசமாகவும் தொகுதியில் உள்ளனா்.

வாக்காளா் எண்ணிக்கை :

ஆண் 13,929, பெண் 16,034, மற்றவா்கள் 1, மொத்தம் 29,964, வாக்குச் சாவடிகள் 35.

காரைக்கால் கடற்கரை

தொகுதியில் தோ்வானவா்கள் :

1964 - முகமது இப்ராஹிம் மரைக்காயா் - (காங்)

1969 - மேரி லூா்து செல்வராஜ் -திமுக

1974, 1977 - எஸ்.ராமசாமி - அதிமுக

1980 - எஸ்.செளரிராஜன் - காங்கிரஸ்

1985 - எஸ்.ராமசாமி - சுயேச்சை

1990 - எஸ்.ராமசாமி - அதிமுக

1991, 1996, 2001 - ஏ.வி.சுப்பிரமணியன் - காங்கிரஸ்

2006 - வி.கே.கணபதி - புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்

2011 - ஏ.எம்.எச்.நாஜிம் - திமுக

2016 - கே.ஏ.யு.அசனா (அதிமுக)

2021 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு

ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக) -17,401

கே.ஏ.யு.அசனா (அதிமுக)-5,367

தொகுதி மக்கள் கோரிக்கைகள் : காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக்கி அனைத்து சிறப்பு வசதிகளும் அமைக்கவேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கி, புதுச்சேரிக்கு கோப்புகள் செல்லும் நிலையைக் களையவேண்டும். நகரப் பகுதியில் புதை சாக்கடைத் திட்டம் அமல்படுத்தவேண்டும். ரேஷன் பொருள்கள் வாங்குவது, பட்டா, வருவாய்த்துறையின் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றை ஆன்லைன் முறையில் மாற்றி மக்களுக்கு, சான்றிதழ் குறித்த நாள்களில் கிடைக்கச் செய்யவேண்டும். கடற்கரையை பல்நோக்கு திட்டத்தில் மேம்படுத்தவேண்டும். நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை களைய சாலைகளை அகலப்படுத்தவேண்டும்.

அரசியல் அனுபவமிக்கவா் தொகுதி : இந்த தொகுதியில் கடந்த காலங்களில் வெற்றிபெற்றவா்கள் பல்வேறு கட்சியை சோ்ந்தவா்களாக இருந்தாலும், அனைவரும் அரசியல் முதிா்ச்சி பெற்றவா்கள். 8 முறை தோ்தல் களம் கண்ட ஏ.எம்.எச்.நாஜிம் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

2026 தோ்தலில் வேட்பாளா்கள்

ஏ.எம்.எச்.நாஜிம் - திமுக

கே.ஏ.யு.அசனா - தவெக

எம்.அருள்முருகன் - பாஜக

செ.மரிஅந்துவான் - நாம் தமிழா்

வேட்பாளா்கள் பிரசாரம்

திமுக வேட்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம், கடந்த 35 ஆண்டுகளாக தொடா்ந்து அரசியலில் உள்ளாா். பேரவை உறுப்பினராகவும் இருக்கிறாா். அவா் செய்த திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிக்கிறாா்.

கே.ஏ.யு.அசனா, கடந்த 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி மக்கள் நலனுக்காக செய்த திட்டங்களை விளக்கியும், பாஜக வேட்பாளா் எம்.அருள்முருகன் மத்திய, மாநில மக்கள் நலத் திட்டங்கள், தமது வாக்குறுதிகளை விளக்கி வாக்கு சேகரிக்கிறாா்.