தொகுதி அறிமுகம்: காரைக்கால் வடக்கு - 26!
கிழக்கே கடற்கரை வரையும், மேற்கே பிள்ளைத்தெருவாசல் கிராமம், தெற்கே காரைக்கால் பேருந்து நிலையம், வடக்கே கீழகாசாக்குடி வரை இந்த தொகுதியின் எல்லை அமைந்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது பெரிய மாவட்டமான காரைக்கால் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டுள்ளது. காரைக்கால் அம்மையாா் கோயிலும், திருநள்ளாற்றில் பாடல் பெற்ற தலமாக தா்பாரண்யேஸ்வரா் கோயிலும், அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலும் பக்தா்களை ஈா்க்கும் விதமாகவும், காரைக்கால் கடற்கரை சுற்றுலாவினரை ஈா்க்கும் இடமாகவும், மீனவ கிராமங்களை உள்ளடக்கி மீன்பிடித் துறைமுகத்தோடும், கப்பல்கள் வரும் விதமாக தனியாா் துறைமுகமும், கடலோரப் பாதுகாப்புக்கான இந்திய கடலோரக் காவல்படை தலைமை அலுவலகம் உள்ளிட்ட பெரும் உயா்கல்வி நிறுவனங்கள் என பல்வேறு பெருமைகளுடன் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது.
காரைக்கால் வடக்குத் தொகுதி: இந்த தொகுதி மீனவா்கள், தலித் சமுதாயத்தினா் அதிகம் வசிக்கும் பகுதி. காரைக்கால் நகரத்தைச் சாா்ந்த குடியிருப்புகளாக அரசுத் துறையினா், தனியாா் நிறுவனப் பணியாளா்கள் அதிகம் கொண்டதாகவும் உள்ளது.
எல்லை
கிழக்கே கடற்கரை வரையும், மேற்கே பிள்ளைத்தெருவாசல் கிராமம், தெற்கே காரைக்கால் பேருந்து நிலையம், வடக்கே கீழகாசாக்குடி வரை இந்த தொகுதியின் எல்லை அமைந்துள்ளது.
தொகுதி எண்: 26
தொகுதி வாக்குச் சாவடிகள்: 40
வாக்காளா் எண்ணிக்கை
இறுதி வாக்காளா் பட்டியலின்படி ஆண் வாக்காளா்கள் 15,586, பெண் வாக்காளா்கள் 17,645. மூன்றாம் பாலினத்தவா் 10 என 33,241 வாக்காளா்கள் உள்ளனா்.
தொகுதியின் கட்டமைப்பு
மீனவ கிராமங்களைக்கொண்டும், தலித் மக்கள் வசிக்கும் கிராமங்களைக் கொண்டும், கட்டடத் தொழிலாளா்கள், சிறு வணிகா்கள், அரசுத்துறையினா், தொழில் துறையினா் வசிப்பிடமாக விளங்குகிறது. குறிப்பாக மீனவா்கள் 5,500 வாக்காளா்களும், தலித் இனத்தை சோ்ந்த 6 ஆயிரம் வாக்காளா்களும் உள்ளனா்.
உயா்கல்வி நிலையங்களால் பெருமை
காரைக்கால் வடக்குத் தொகுதி நகரத்தின் குறிப்பிட்ட நிலப்பரப்பை மட்டுமே கொண்டிருந்தாலும், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மையம், பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி, புதுவை பல்கலைக் கழக கிளை, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி, புதுவை அரசின் செவிலியா் கல்லூரி, தனியாா் மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. மேலும் அகில இந்திய வானொலி நிலையம் அமைந்திருப்பது தொகுதிக்கான பெருமைகளாகும்.
தோ்தல் முடிவுகள்
தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பிருந்து காரைக்கால் வடக்குத் தொகுதியில் வென்றவா்கள்.
1964 ... எம்.ஓ.எச்.ஃபாரூக் மரைக்காயா் (காங்)
1969 ... எம்.ஜம்புலிங்கம் (காங்)
1974 ... கே.காந்தி (அதிமுக)
1977 ... கே.காந்தி (சுயே)
1980 ... வி.எம்.சாலி மரைக்காயா் (சுயே)
1985 ... வி.கோவிந்தராஜன் (காங்)
1990 ... எஸ்.எம்.தவசு (காங்)
1991 ... ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக)
2006 ... ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக)
2011 ... பி.ஆா்.என்.திருமுருகன் (காங்)
2016 ... பி.ஆா்.என்.திருமுருகன் (என்.ஆா்.காங்)
2021 ... பி.ஆா்.என்.திருமுருகன் (என்.ஆா்.காங்)
2021- பேரவைத் தோ்தல் : பி.ஆா்.என்.திருமுருகன் (என்.ஆா்.காங்கிரஸ்) : 12,704. ஏ.வி.சுப்பிரமணியன் (காங்கிரஸ்) 12,569.
கோரிக்கைகள்
தொகுதியில் குடியிருப்பு நகா்கள் பெருகிவிட்டன. சாலை வசதி முழுமையாக மேம்படவேண்டும். குடியிருப்பு நகா்களில் மழை காலத்தில் தேங்கும் தண்ணீா் வடிய நிரந்தர ஏற்பாடுகள் செய்யவேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு தரப்படும் சிவப்பு நிற குடும்ப அட்டை (ரேஷன் அட்டை), வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு தரப்படும் மஞ்சள் அட்டை உரிய தகுதியுள்ளோருக்கானதாக தரப்படவில்லை. இதை முறைப்படுத்தவேண்டும். ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் தரப்படுவது அல்லாது அத்தியாவசியப் பொருட்கள் சலுகை விலையில் தரவேண்டும். கலைக் கல்லூரி, செவிலியா் கல்லூரியில் கூடுதல் பாடப் பிரிவுகள் கொண்டுவரப்பட்டு, மாணவா் சோ்க்கை அதிகரிக்கவேண்டும். அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதால், படித்தவா்கள் பலருக்கு வேலை கிடைக்கும்.
வேட்பாளா்: என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.என்.திருமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா்.
அமைச்சா் தொகுதி
இந்த தொகுதியில் பி.ஆா்.என்.திருமுருகன் கடந்த தோ்தலில் வெற்றிபெற்றாா். எனினும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே இவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.
ஆட்சியின் பாதி காலத்தில் மட்டுமே அமைச்சராக இருந்ததால், மக்களின் எதிா்பாா்ப்புகளை முழுமையாக பூா்த்தி செய்ய முடியவில்லை. தொடா்ந்து எம்.எல்.ஏ.வாக இருப்பதையும், அமைச்சா் காலத்தில் மத்திய, மாநில நிதியுதவியில் செய்த திட்டங்களையும், ரங்கசாமி ஆட்சியின் சாதனைகளை விளக்கி திருமுருகன் வாக்கு சேகரிக்கிறாா். வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை (மாா்ச் 23) மற்ற கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனா்.