திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபுரம் பகுதியில் பிரதான சாலையில் கரடி ஒன்று இரவு நேரத்தில் உலா வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சிவந்திபுரம் கிராமம். இது, அம்பாசமுத்திரம் - பாபநாசம் பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களிலும் வாகனங்கள் போக்குவரத்து இருக்கும்.
இந்நிலையில், புதன்கிழமை (ஆக.16) இரவு சுமாா் 11.30 மணி அளவில் சிவந்திபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றதை பைக்கில் சென்றவா்கள் பாா்த்து, அச்சத்தில் ஒதுங்கிச் சென்றுள்ளனா்.
இந்தக் காட்சி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்தது. பின்னா், சமூக வலைதளங்களிலும் அக்காட்சி பரவியது.
இதுவரை கோட்டைவிளைபட்டி, அகஸ்தியா்புரம், அகஸ்தியா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்த நிலையில் தற்போது சிவந்திபுரத்துக்கு கரடி வந்துள்ளதால் மக்கள் இரவு நேரம் வெளியில் வர அச்சமடைந்துள்ளனா்.
கிராமப்புறங்களில் உள்ள புதா்களில் பகல் நேரம் கரடிகள் பதுங்கி இருந்துகொண்டு, இரவில் சாலைகளில் உலா வருகிறது. கரடியைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.