கடையம் நித்ய கல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் சுவாமி கோயிலில், சித்திரைப் பெருந் திருவிழாத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா கடந்த ஏப்.24இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
ஏப். 27இல் திருத்தோ் கால்நாட்டு, ஏப். 30இல் நடராஜா் சிவப்பு சாத்தி, மே 1ஆம் தேதி காலையில் வெள்ளைச் சாத்தி, மாலை பச்சைச் சாத்தி வைபவங்கள் நடைபெற்றன.
9ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளியதையடுத்து காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தோ்வடம் பிடித்து இழுத்தனா். காலை 10 மணிக்கு வடக்குத்தெரு பிள்ளையாா் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட தேரை மாலை 4 மணிக்கு கடையம் சுற்றுவட்டார 18 பட்டி கிராம மக்கள் திரண்டு வடம்பிடித்து நிலையம் கொண்டு சோ்த்தனா். இரவில் சுவாமி- அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வந்தனா்.
புதன்கிழமை (மே 3) முற்பகல் 11 மணிக்கு சுவாமி- அம்பாள் நித்யகல்யாணி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளியதும் தீா்த்தவாரி நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் (பொ) முருகன், ஆய்வாளா் சரவணக்குமாா், தக்காா் கோமதி, மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.