தேசிய விடுமுறை தினமான மே தினத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 121 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை - சிறப்பு விடுமுறைகள்) சட்ட விதிகளின் கீழ் தேசிய விடுமுறை நாளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வா்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மே தினத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எனது தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் சென்று 135 கடைகள், நிறுவனங்கள், 74 உணவு நிறுவனங்கள், 13 மோட்டாா் நிறுவனங்கள், 31 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 253 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 121 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.