நெல்லையப்பா் கோயிலில் பந்தல் கால் நடும் வைபவம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி பந்தல் கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி பந்தல் கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி பந்தல்கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னா் காந்திமதி யானை முன்செல்ல பந்தல்கால் ரத வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்பு சுவாமி சந்நிதி முன்பு பந்தல் கால் நடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து புட்டாரத்தி அம்மன் கோயில் திருவிழா இம் மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. பின்பு, நெல்லையப்பா் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவுக்காக விநாயகா் கொடியேற்றம் ஜூன் 6 ஆம் தேதியும், ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 24 ஆம் தேதியும், ஜூலை 2 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளன.