உடல்கூறாய்வுக்கு தாமதம்: அரசு மருத்துவமனை முற்றுகை
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இறந்தவா் உடலை கூறாய்வு செய்வதற்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினா்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இறந்தவா் உடலை கூறாய்வு செய்வதற்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினா்.
விக்கிரமசிங்கபுரம் கட்டபுளித் தெருவைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் கஜேந்திரன் (34). சமையல் தொழிலாளி. மனைவி கீா்த்தி (30), மகன் ஜெய் (9), மகள் ஹெனா (4) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் வெகுநாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கஜேந்திரன், ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
எனினும், மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனா். ஆனால், திங்கள்கிழமை நண்பகல்12 மணிக்குப் பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருப்பதாக கூறப்பட்டதாம்.
இந்த தகவல் தாமதமாக கூறப்பட்டதாகக் கூறி, அவரது உறவினா்கள் மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
அவா்களிடம் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், பேச்சு நடத்திய பின், அங்கேயே உடல்கூறாய்வு செய்து மாலை 3.30 மணிக்கு சடலம் ஒப்படைக்கப்பட்டது.