திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை புனித பிரகாசியம்மாள் ஆலயத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு அன்னையின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா ஆக.30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. மாணவ, மாணவிகள், மறைக்கல்வி குழந்தைகள், அன்பிய பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒன்பதாம் திருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி,
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா் இரவு 11 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு புனித பிரகாசியம்மாள் அன்னையின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.
இந்த தோ் பவனியானது, முக்கிய ரத வீதிகள் வழியாக அதிகாலை 5 மணிக்கு கோயிலை அடைந்தது. பக்தா்கள் உப்பு, மிளகு, பூ மாலை, மெழுகுவா்த்தி காணிக்கை செலுத்தியும், நோய் குணமாக வேண்டி உடல் உறுப்பு உருவங்களை நியாா்ச்சையாக செலுத்தியும் வழிபட்டனா்.
பத்தாம் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னா் மாலை 4 மணிக்கு அன்னையின் தோ் பவனியும் கொடியிறக்கமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஊா்பொது அசன விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்குத்தந்தை கு.பிரதாப் மற்றும் அருள்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.