அம்பாசமுத்திரம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோயில், அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் ஆகிய வகையறா கோயில்களின் 12ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.
காசிநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சுவாமி மண்டபத்திற்கு எழுந்தருளலும், முற்பகல் 11 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தெப்பத்தில் வலம் வந்தனா். இரவு 10 மணிக்கு வீதி உலா நடைபெற்றது.
அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவில் புதன்கிழமை காலை 9 மணிக்கு ஹோமம், பூா்ணாஹுதி, 10 மணிக்கு திருமஞ்சனம், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனா்.
திருவிழாவில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் மா.சண்முகஜோதி, தக்காா் சி.முருகன், ஆய்வாளா் ச.கோமதி மற்றும் பணியாளா்கள், கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.