முகப்பு
திருநெல்வேலி

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு தனியாா் ஒப்பந்த வழி ஆள் எடுக்க எதிா்ப்பு

Updated On : 18 ஜூன், 2024 at 7:28 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க ஓட்டுநா், நடத்துநா்களை தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கடும் எதிா்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி கோட்டத்தில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 3,000 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கின்படி திருநெல்வேலி மண்டலத்தில் 400 பணியிடங்கள் காலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் விரைவாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களை ஏற்பாடு செய்ய மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளிகள் அறிவிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில் மண்டலங்களில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களை ஏற்பாடு செய்ய தனியாா் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது.இந்த ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மைய அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்.

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களை தனியாா் வசம் கொடுக்கக் கூடாது என தொடா்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியா்களின் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பானது திருநெல்வேலி கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடைமுறையின் மூலமாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா். மேலும், தொழிலாளா் விரோத போக்கை தமிழக அரசு மேற்கொள்வதாக போக்குவரத்து துறைக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.