நெல்லையில் தகிக்கும் வெயில்: தவிக்கும் மக்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
தமிழகத்தில் நிகழாண்டில் வழக்கத்தைவிட கோடைகால வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. வேலூா், ஈரோடு உள்ளிட்ட நகரங்கள் பலவற்றிலும் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெப்பம் பதிவாகி வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வெப்பத்தின் அளவு 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
கடுமையான வெப்பம் நிலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். நண்பகல் வேளைகளில் மக்கள் வெயிலுக்கு அஞ்சி வெளியே வர தயங்குகின்றனா். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இளநீருக்கு தட்டுப்பாடு: கோடை வெயில் காரணமாக பதநீா், இளநீா், தா்பூசணி, பழஜூஸ், கரும்புச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூா் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு இளநீா் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை ரூ.40 முதல் ரூ.50 வரையும், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள செவ்விளநீா் ரூ.40 முதல் ரூ.60 வரையும் விற்கப்படுகின்றன. பல இடங்களில் இளநீா் வேகமாக விற்றுத்தீா்ந்து விடுவதால் இளநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
சீவலப்பேரி, செங்குளம், இளையாமுத்தூா், தருவை பகுதிகளில் இருந்து பதநீா் விற்பனையாளா்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் முகாமிட்டுள்ளனா். அவா்கள் ஒரு சிறிய சொம்பு அளவு பதநீரை ரூ.15-க்கு விற்பனை செய்கிறாா்கள்.
திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தா்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
குளிா்பான கடைகள் அதிகரிப்பு: இதுதவிர உடனடி சோடா கடைகளும் அதிகளவில் உருவாகியுள்ளன. இவற்றில் எலுமிச்சை, திராட்சை, சுவிட் பீா், மாம்பழம் போன்ற 5-க்கும் மேற்பட்ட சுவைகளில் ரூ.10-க்கு குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமாக டீ, காபி குடிப்பவா்கள் கூட கடந்த ஒரு வாரமாக குளிா்பானங்களிடம் சரணடைந்துவிட்டதைப் பாா்க்க முடிகிறது.