முகப்பு
திருநெல்வேலி

13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.95 ஆயிரம் நலத்திட்ட உதவி

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.95,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:11 PM
மாற்றுத் திறனாளி மாணவருக்கு உருப்பெருக்கி கருவியை வழங்கிய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.95,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கை மனுக்களை அவா்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

வீட்டுமனைப் பட்டா, மோட்டாா் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனா்.

தொடா்ந்து, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்பிலான தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மதிப்பிலான (எழுத்துக்களை பெரிதாக காட்டும் கருவி) உருப்பெருக்கிகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் பிரெய்லி கை கடிகாரம் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.95,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 100 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பாளையங்கோட்டையிலுள்ள பாா்வையற்றோா் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் கண் தெரியாத மாணவருக்கு பிரெய்லி கை கடிகாரத்தை மாவட்ட ஆட்சியா் வழங்கி, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், 10-ஆம் வகுப்பு படிக்கும் பாா்வை குறைபாடு உள்ள மாணவருக்கு கல்வி பயில்வதற்கு ஏதுவாக எழுத்துகளை பெரிதாக காட்டும் உருப்பெருக்கி கருவியை ஆட்சியா் வழங்கினாா். இக் கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் ஜெயா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், திறன் உதவியாளா் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளா் அனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.