தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்: வருவாய் இலக்கு ரூ.1.14 கோடி
காந்தியடிகளின் 156ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
காந்தியடிகளின் 156ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
பாளையங்கோட்டை புனித தாமஸ் சாலையில் உள்ள கதா் அங்காடியில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் படத்துக்கு, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் மலா் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதா் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சால் ஆன மெத்தை, தலையணைகள், கதா் பாலியஸ்டா், உல்லன் ரகங்கள், சுத்தமான அக்மாா்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருள்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருள்கள் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளால் கதா் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் அரசுப் பணியாளா்களுக்கு அவா்களுடைய மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக் காலம் வரை அனைத்து நாள்களிலும் கதா் அங்காடிகள் செயல்படும்.
2024-2025ஆம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.1.14 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்பாளா்கள், நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும் கதா் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதா் கிராமம் தொழில் வாரிய திருநெல்வேலி உதவி இயக்குநா் வடிவேலன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள்தொடா்பு அலுவலா் (செய்தி) எம்.எஸ்.மகாகிருஷ்ணன், மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.