மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனா்.
மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத்தின் தலைவா் மா.மாரியப்பபாண்டியன் தலைமையில், ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து முற்றுகையில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: ராமையன்பட்டி ஊராட்சியில் பட்டியலினத்தவா், அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்பவா்கள் அதிகம். இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் சொத்து வரி, வீட்டு வாடகை உயரும். மேலும், இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள்கள் பணி கிடைப்பது தடைபடும்.
தொழில் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஏதுவாக, சில பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை அதிகாரிகள் தவிா்த்துள்ளனா். ஆகவே, ராமையன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் முடிவை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.