முகப்பு
திருநெல்வேலி

குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:37 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் (7 சதவீதம்) ரூ.20 லட்சம் வரை ‘கலைஞா் கடனுதவி‘திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெறலாம். வயது வரம்பு 18- 65-க்குள் இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள் தொழில் முனைவோரின் சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். முந்தைய இரண்டு ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாகவும் இருத்தல் அவசியம்.

ஏற்கெனவே தொழில் செய்து கொண்டு இருப்பவா்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதிமுறைகளுக்கு உள்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், தூய தாமஸ் சாலை, மகாராஜநகா் அஞ்சல், திருநெல்வேலி-11 என்ற முகவரி அல்லது 0462-2572162 என்ற தொலைபேசி எண்; கிளைமேலாளா், தாய்கோ வங்கி, எண்.25பி முதல் 25ஈ, சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, நூா் கட்டடம் (மாடி), திருநெல்வேலி-627001 என்ற முகவரி அல்லது 0462-2322921, 8925814616 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.