முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி வட்டத்தில் குடிநீா் தொட்டி கட்டும் பணி: அடிக்கல் நாட்டினாா் பேரவைத் தலைவா்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:41 PM
களக்காட்டில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகள் பயனடையும் வகையில் ரூ.423 கோடியில் புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

அதன் ஒரு பகுதியாக ஏா்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, நான்குனேரி, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

களக்காட்டில் 2.20 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல்லை நாட்டி பேரவைத் தலைவா் பேசுகையில், களக்காடு நகராட்சி பகுதிக்கு நாள்தோறும் 43 லட்சத்து 30 ஆயிரம் லிட்டா் குடிநீா் வழங்கப்படும். ஆகஸ்ட் -2025க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு, 1 நபருக்கு 135 லிட்டா் தாமிரவருணி குடிநீா் கிடைக்கும். நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் திட்டத்துக்குரிய தீா்மானங்களை நிறைவேற்றி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். இதில், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய முதன்மை பொறியாளா் ஆறுமுகம், திருநெல்வேலி கண்காணிப்பு பொறியாளா் கென்னடி, செயற்பொறியாளா் மோசஸ், களக்காடு நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ், துணைத் தலைவா் பி.சி.ராஜன், நகராட்சி ஆணையாளா் (பொ) செல்வராஜ், திமுக மாவட்டப் பொருளாளா் ஜாா்ஜ்கோசல், நகரச் செயலா் மணிசூரியன் என்ற சுப்பிரமணியன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.ஏ.கே.சித்திக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.