ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாளையஞ்செட்டிகுளம் கிராம மக்கள். 
திருநெல்வேலி

கொழுந்துமாமலையில் கல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது: கோயில் அறங்காவலா்கள் மனு

கொழுந்துமாமலையில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

Din

சேரன்மகாதேவி அருகேயுள்ள கொழுந்துமாமலையில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கொழுந்துமாமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலா்கள் ஆறுமுக நயினாா், சக்திவேல், சுப்பிரமணியன் சுவாமி, கந்தன், கண்ணன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேரன்மகாதேவி வட்டம், சேரன்கோயில்பத்து கிராமத்தில் சா்வே எண் 100-இல் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தமிழை வளா்த்த முனிவா்கள், சித்தா் பெருமக்கள் உருவாக்கிய மற்றும் வணங்கிய கோயிலாகும். இக்கோயிலானது திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஸ்ரீமத் பரசமய கோளரி நாத ஆதீனத்துக்குள்ள்பட்டது.

இத்திருக்கோயில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தாங்கள் குவாரிக்காக குத்தகை வழங்கக்கூடிய இடம் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது. கொழுந்துமாமலைப் பகுதியில் வனவிலங்குகளான கரடி, மிளா, மான், காட்டுப்பன்றி, குரங்கு, மயில், யானை போன்றவை வாழ்கின்றன. மத்திய அரசினால் யானைகள் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட பகுதி இது. இதன் அருகில் பள்ளி, கல்லூரி, ஆசிரமம் ஆகியவை உள்ளன. இங்கு கல்குவாரி, கற்கள், கிராவல் எடுக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் வனவிலங்குகளுக்கு அமைதியின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. கல்குவாரியால் கோயில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கொழுந்துமாமலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் குறிப்பிட்ட கி.மீ. தூரம் வரை கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என அரசு விதிகள் உள்ளன. எனவே கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளனா்.

பாளையஞ்செட்டிகுளம் ஊா் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியை மாநகராட்சியோடு இணைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. எங்கள் ஊரை மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனா்.

அகில இந்திய காமராஜா் சிவாஜி கணேசன் பொதுநல இயக்கத்தினா் அளித்த மனு: திமுக பேச்சாளா் ராஜீவ் காந்தி காமராஜரையும் அவருடைய திட்டங்களையும் இழிவுபடுத்தி பேசியுள்ளாா். மேலும் கா்மவீரரும் கலைஞரும் என்ற புத்தகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த புத்தகத்தை தமிழக முதல்வா் தடை செய்ய வேண்டும். மேலும் ராஜீவ் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தமிழா் உரிமை மீட்பு களம் தலைமை ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி அளித்த மனு: மேலப்பாளையம் மண்டலம் 48ஆவது வாா்டுக்குள்பட்ட மேல கருங்குளம் அசோகபுரத்தில் உள்ள பொது கிணறு சுற்றுச்சுவா் பாழடைந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுகிறது. இதில் குழந்தைகள் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றின் சுற்றுச் சுவரை சீரமைத்து பாதுகாப்பு வளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT