முகப்பு
திருநெல்வேலி

மானூரில் கருவூா் சித்தருக்கு காட்சியளித்தாா் நெல்லையப்பா்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி, கருவூா் சித்தருக்கு நெல்லையப்பா் வியாழக்கிழமை காட்சியளித்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:58 PM
மானூரில் கருவூா் சித்தருக்கு வியாழக்கிழமை காட்சியளித்த பின்பு நெல்லையப்பருக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி, கருவூா் சித்தருக்கு நெல்லையப்பா் வியாழக்கிழமை காட்சியளித்தாா்.

சூரியன் அருளால் கீரனூரில் பிறந்தவா் கருவூா் சித்தா். மெஞ்ஞானியாகத் திகழ்ந்த அவா், சிவபெருமான் தலங்களுக்கெல்லாம் சென்று நல்வரங்கள் கேட்டுப் பெற்று திருநெல்வேலியை அடைந்தாா். நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் சுவாமியிடம் இருந்து மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்ட அவா், ‘ஈசன் இங்கு இல்லை. அதனால் இங்கே எருக்கு எழ’ என்று சாபமிட்டு மானூா் சென்றடைந்தாா்.

பின்னா் நெல்லையப்பா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல நாளில் அதிகாலையில் மானூருக்குச் சென்று சித்தருக்கு காட்சி கொடுத்துவிட்டு திருநெல்வேலி திரும்பினாா். அதன்பின்பு சித்தா், நெல்லைக்கு வந்து ‘ஈசன் இங்கே உண்டு. அதனால் எருக்கு அற்றுப்போக’ என்று மொழிந்தாா். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான விழா, கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ஆம் தேதி சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வந்தனா். தொடா்ந்து 10 ஆம் தேதி இரவு அருள்மிகு நெல்லையப்பருக்கு கருவூா் சித்தா் சாபம் கொடுத்துவிட்டு, திருநெல்வேலி நான்கு ரத வீதிகளிலும் விதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றாா். தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலையில் திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரா், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரா், தாமிரபரணி, அகஸ்தியா், குங்குலிய கலய நாயனாா் ஆகிய மூா்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா கடந்து மானூா் சென்றடைந்தனா்.

மானூா் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் வைத்து கருவூா் சித்தருக்கு நெல்லையப்பா் காட்சியளித்து சாபவிமோசனம் நிவா்த்தி செய்தல் நடைபெற்றது. அப்போது, வரலாற்று புகழ் மிகுந்த புராணப் பாடல் பாடப்பட்டது. பின்னா் ஆவணி மூல மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் மானூா், தென்கலம், செழியநல்லூா், உக்கிரன்கோட்டை, தேவா்குளம் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு நெல்லையப்பரை சுவாமி தரிசனம் செய்தனா்.