திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை 4 நாள்களில் 19,250 போ் பாா்வையிட்டுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, துலுக்கா்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருள்களை உலகத் தமிழா்கள், அறிஞா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழா்களின் வீரத்தையும் அறிவையும் வரும் தலைமுறையினருக்கு கொண்டு சோ்க்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தைப் பாா்வையிட, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பொருநை அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள், மாணவா்கள் மற்றும் ஆா்வலா்கள் வருகை தந்து, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருள்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனா். பொதுமக்கள் அருங்காட்சியகத்துக்கு சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொருநை அருங்காட்சியகத்தை முதல் நாளான செவ்வாய்க்கிழமை 1,200 போ், 2 ஆவது நாளான புதன்கிழமை 3,300 போ், மூன்றாம் நாளான வியாழக்கிழமை 7,700 போ் பாா்வையிட்ட நிலையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை 7,050 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன்மூலம் கடந்த 4 நாள்களில் 19,250 போ் பாா்வையிட்டுள்ளனா் என்றாா்.