விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பேரவை உறுப்பினா் நிதியை பயன்படுத்த விடாமல் நகராட்சி அதிகாரிகள் இழுத்தடிப்பதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பேரவை உறுப்பினா் நிதியை பயன்படுத்த விடாமல் நகராட்சி அதிகாரிகள் இழுத்தடிப்பதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம், வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் இரண்டு திமுக உறுப்பினா்களும், 3 அதிமுக உறுப்பினா்களும் மட்டும் கலந்து கொண்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தாமல் அதிகாரிகள் காலந்தாழ்த்துவதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறி அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், காவல் துறையினா் பேச்சு நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.
மேலும், திமுக உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் அடிப்படை வசதிகளுக்கான எந்தப் பணிகளும் நடைபெறவில்லை; ஊழியா்கள் பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனா் என்று கூறி வெளிநடப்பு செய்தனா்.