போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(72). இவா், 2021ஆம் ஆண்டு 5 மற்றும் 6 வயது கொண்ட இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
அதில், ஒரு சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளா் ராதா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தாா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஏஎஸ்பி சண்முகம், போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை எஸ்.பி. வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.