வள்ளியூரில் ரூ. 12.3 கோடி மதிப்பிலான பேருந்து நிலையம் திறப்பு
வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 12.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப்பணியையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருநெல்வேலிவள்ளியூரில் ரூ. 12.3 கோடி மதிப்பிலான பேருந்து நிலையம் திறப்பு
வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 12.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப்பணியையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 12.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப்பணியையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனா். இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவா், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோா் வெண்கலச்சிலைகளை திறந்து வைத்தனா்.
இதையடுத்து , வடக்கன்குளத்தில் நடைபெற்ற குடிநீா் திட்டப்பணிகள் திறப்பு விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு பேசியது: பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சாா்ந்த 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 605 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா்.
இத்திட்டத்தில் தாமிரவருணி ஆற்றில் மேலமுன்னீா்பள்ளம் அருகில் நீா் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து நாளொன்றுக்கு 22.79 மி.லி. குடிநீா் 160 திறன் கொண்ட மின் மோட்டாா் மூலம் எடுக்கப்பட்டு, சிங்கிகுளத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு நீா் கொண்டு செல்லப்படும். அங்கு நீா் சுத்திகரிக்கப்பட்டு பின்னா் பிரண்டைமலை, தெற்குவள்ளியூா், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 3 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு 60.94 கி. மீ. நீளமுள்ள நீருந்து மற்றும் தன்னோட்ட குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் 54 தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து நீா் இறைப்பான்கள் மூலம் 569.5 கி. மீ. நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலமாக புதிதாக கட்டப்பட்டுள்ள 162 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள், பயன்பாட்டில் உள்ள 176 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் 65 ஆயிரத்து 434 வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.
ரூ. 423.13 கோடி மதிப்பில் களக்காடு நகராட்சி, வடக்கு வள்ளியூா், பணகுடி, திசையன்விளை, ஏா்வாடி, திருக்குறுங்குடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து விடும் என்றாா்.
முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் கணேசன், மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா, நிா்வாகப் பொறியாளா் ராமலெட்சுமி, வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா, பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், செயல் அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.