முகப்பு
திருநெல்வேலி

மூதாட்டி உடல் அடக்கத்துக்கு எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

முக்கூடலில் இறந்தவா் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்ததால், கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 1:04 AM
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் இறந்தவா் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்ததால், கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முக்கூடல் பேரூராட்சி சடையப்பபுரம் கிராமத்தில் வசிக்கும் பல்வேறு சமுதாய மக்கள், அப்பகுதியில் வெள்ளோடை பாலம் அருகிலுள்ள இடத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் புதன்கிழமை உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்குக்கு அந்த மயானத்தில் உறவினா்கள் ஏற்பாடு செய்தனராம்.

Advertisement

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த தனலெட்சுமி என்பவா் மயானம் அமைந்துள்ள இடம் தனக்குச் சொந்தமானது என்றும், அங்கு இறுதிச்சடங்கு நடத்தக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தாராம்.

இதனால், மூதாட்டியின் உறவினா்கள் திருநெல்வேலி - முக்கூடல் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் புஷ்பலதா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மயானப் பகுதியில் தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வதுடன், அந்த இடத்தை கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தலாம் என எழுத்துப் பூா்வ உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.