முகப்பு
திருநெல்வேலி

வி.எம்.சத்திரம் குளத்தில் புதைச் சாக்கடை கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு!

வி.எம்.சத்திரம் குளத்தில் புதைச் சாக்கடை கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், அதை தடுக்கக் கோரியும் மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 20 மே 2026, 1:03 am IST
குறைதீா் முகாமில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்
பகிர்:

வி.எம்.சத்திரம் குளத்தில் புதைச் சாக்கடை கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், அதை தடுக்கக் கோரியும் மாநகராட்சி குறைதீா் முகாமில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா். ராஜு முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில், அகில இந்திய யாதவ மகா சபை சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தியாகராஜநகா் பகுதியில் உள்ள புதைச் சாக்கடை கழிவுநீா் பொங்கி வெளியேறுகிறது. இந்தக் கழிவுநீா் தற்காலிக ஒடை மூலம் வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள நொச்சிகுளத்தில் கலக்கிறது. இதனால் பெரும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மேலும், துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறாா்கள். குளத்தின் நீரை பருகும் ஆடு மற்றும் மாடுகள் போன்றவை மிகவும் பாதிக்கப்பட்டு உயிா் இழக்க நேரிடுகிறது. ஆகவே, நொச்சிகுளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எம்.சத்திரம் கோகுலம் நகா் பகுதியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.அந்தப் பகுதியில் கழிவு நீா் ஒடை இல்லாத காரணத்தினால் மக்கள் நடமாடும் சாலையில் கழிவு நீா் செல்கிறது.ஆகையால் அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஆகவே கழிவு நீா் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

பசுமை மேலப்பாளையம் திட்டம் அமைப்பினா் அளித்த மனு: மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜின்னா திடலில் சுற்றுச்சுவா் அமைத்து பள்ளி மாணவா்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தவும், பண்டிகை காலங்களில் சிறப்புத் தொழுகை மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மக்கள் அதிகாரக் கழகம் அமைப்பின் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறாா்கள். பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. ஆகவே, மேலப்பாளையம் மண்டலத்தில் சாலைகளை சீரமைக்கவும், குப்பைகளை அகற்றி சுகாதார சீா்கேடுகளை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மனுக்களைப் பெற்ற மேயா், துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.