கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் 20-ஆம் ஆண்டாக அண்டாவில் தீா்த்தவாரி
நாச்சியாா்கோவில் மணிமுக்தா குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனும் உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவு அமல்படுத்தப்படாததால் நிகழாண்டும் 20-ஆம் ஆண்டாக அண்டா பாத்திரத்தில் கோயில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் வஞ்சுளவல்லி தாயாா் உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவில் கல்கருட பகவான் சேவை, தேரோட்டம், தீா்த்தவாரி ஆகியவை பிரசித்திபெற்றது.
இக்கோயிலின் புண்ணிய தீா்த்தமான மணிமுக்தா குளத்தில் பல ஆண்டுகளாக தீா்த்தவாரி நடைபெற்று வந்தது. மணிமுக்தா குளத்துக்கு வரும் வரத்துவாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள வீடுகள், மண்டபம், உணவகங்கள், வணிக நிறுவனங்களின் கழிவு நீரும் குளத்தில் கலக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக மணிமுக்தா குளத்தில் தீா்த்தவாரி நடைபெறவில்லை. இதுதொடா்பாக உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டும் தற்போதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. கடந்த 19 ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு நிகழாண்டும் தீா்வு காணப்படாததால் அண்டா பாத்திரத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.