தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவைக்கான வசதிகள் தயார்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் வந்து செல்லும் வகையில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனால் இரவு நேர விமான சேவை தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி. இன்பராஜ்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் வந்து செல்லும் வகையில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனால் இரவு நேர விமான சேவை தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 1992-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சில ஆண்டுகள் சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், 2006-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி சென்னை- தூத்துக்குடி இடையே சிறிய ரக பயணிகள் விமான போக்குவரத்தை ஏர்டெக்கான் நிறுவனம் தொடங்கியது.

போதிய வருமானம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விமான சேவை சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கிங்பிஷர் நிறுவனமும் சில ஆண்டுகள் விமான சேவையைத் தொடங்கி,பின்னர் நிறுத்தியது.

இப்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் இரண்டு வேளைகளில் விமானத்தை இயக்கி வருகிறது.

நாள்தோறும் காலை 8.40 மணிக்கும், மாலை 3.25 மணிக்கும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 270 பேர் சராசரியாக தூத்துக்குடி விமான நிலையத்தைப் பயன்படுத்துவதால் கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும், நான்குவழிச் சாலை வந்த பின் வாகனங்களில் செல்வது எளிதாக உள்ளதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் விமானங்கள் வந்து செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வர்த்தக அமைப்புகளும், தொழில் நிறுவனங்களும் வலியுறுத்தின.

இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் (ஹாலோஜன்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 1350 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட விமான ஓடுதளத்தில் இரு பக்கங்களிலும் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விமானம் கீழே இறங்கும்போது விமானிக்கு சிவப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் வகையிலும், விமானம் வரும் திசைக்கு ஏற்ப மாறிக் கொள்ளம் தானியங்கி வசதியுடனும் நவீன வசதிகள் கொண்ட உயர்ரக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து விமானத் துறை இயக்குநரக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த நவ.28-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தனர். இரவில் விமானங்கள் இறங்கும் வகையில் தயார் செய்யப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர்கள், இதுகுறித்த அறிக்கையை விமானத் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தனர். வசதிகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்கும் நிலை உருவாகியுள்ளது. விமானத் துறை அமைச்சக ஒப்புதல் பெற்றவுடன் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மட்டுமன்றி பெங்களூரு, கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக தொழில்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எட்வின் சாமுவேல் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இப்போது 1350 மீட்டர் நீளமுள்ள ஓடுதளம் உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும்.

மேலும், விமான நிலைய விரிவாக்கத்துக்காக 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் வேலை துரிதமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சில மாதங்களில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் வந்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT