தூத்துக்குடி

"துப்புரவு தூத்துக்குடி' எப்போது சாத்தியம்?

தூய்மை இந்தியா, துப்புரவு தூத்துக்குடி எனப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தூத்துக்குடியில் உண்மையான துப்புரவுப் பணிகள்

தி. இன்பராஜ்

தூய்மை இந்தியா, துப்புரவு தூத்துக்குடி எனப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தூத்துக்குடியில் உண்மையான துப்புரவுப் பணிகள் எப்போது நடைபெறும் என்றே மக்கள் ஏங்கி வருகின்றனர்.

துப்புரவு செய்யும் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல், அதை தொடர் பணியாக மாற்றுவதே இப்பிரச்னைக்கு தீர்வைத் தரும்.

தொழில்நகரமான தூத்துக்குடியின் மாநகரப் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகளவில் உள்ளதால் குப்பைகளும் அதிகளவில் தேங்கும் நிலை நீடித்து வருகிறது.

குப்பைகள் தேக்கம், சாலையோரங்களில் மணல் குவியல், ஆங்காங்கே வீசப்படும் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் என மாசுபட்ட நகரமாகவே தூத்துக்குடி மாறி

வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டம் மூலம் அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை குப்பைகளை

அகற்றும் பணியில் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. அவையும் சில நாள்களோடு மறைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், அகில இந்திய வர்த்தக தொழில் சங்க ஒருங்கிணைப்பில் மாநகரப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து "துப்புரவு தூத்துக்குடி' என்ற

திட்டத்தை சனிக்கிழமை தொடங்கின. மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ், ஆணையர் சோ. மதுமதி உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதில், ஸ்டெர்லைட் நிறுவனம், இந்த் பாரத் அனல் மின் நிலையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வஉசி துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு,

துடிசியா, தூத்துக்குடி நகர வர்த்தகங்களின் மத்திய சங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் உதவியோடு மாநகரப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குப்பைகளை சாலையில் கொட்டாமல் மாநகராட்சி வாகனம் வரும்போது கொடுக்க வேண்டும், நகரைச் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும், இவை அனைத்தும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்

இணைந்து மாநகரப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைத் தொட்டிகளை அமைத்து பராமரித்தாலே சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள் ஓரளவுக்கு

குறைய வாயப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாநகரை அழகுபடுத்தும் திட்டம் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், பல்வேறு சமூக

ஆர்வலர்களும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக இதுதொடர்பாக எந்தவித ஆலோசனையும் நடபெறாத நிலையே நீடித்து வருகிறது.

என்ன செய்யலாம்...

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து கூறியது: மாநகரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அக்கறை 

பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இருக்க வேண்டும். பெயரளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்தாமல், உண்மையில் குப்பைகள் அதிகம் தேங்கும் இடங்களுக்குச் சென்று அங்கு

சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை அதிக குப்பைகள் தேங்கி மாசுபடும் நிலையில் உள்ளது. ஆனால், தூய்மை இந்தியா, துப்புரவு தூத்துக்குடி எனப்

பெயர் வைத்துள்ளவர்கள் யாரும் அங்கு இதுவரை சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடாதது வருத்தம் அளிக்கிறது.

மாநகரைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் குப்பையில்லா தூத்துக்குடியை உருவாக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தில்

செயல்பட்டால், நிச்சயம் தூத்துக்குடி நகரம் துப்புரவான நகரமாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும், போட்டிப்போட்டு நிகழ்ச்சிகளை நடத்தாமல் உண்மையான ஆர்வத்துடன்

வீடுவீடாகவும், அனைத்துக் கடைகளுக்கும் சென்று, குப்பைகள் கொட்டுவதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுதவிர, தனியார் பங்களிப்புடன் போதிய துப்புரவுப் பணியாளர்களை தேர்வு செய்து, சுத்தமான நகரை உருவாக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தில்

செயல்பட்டால் நிச்சயமாக தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT