முகப்பு
தூத்துக்குடி

புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து விதிமுறையை  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமுறையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெ. மகேந்திரன்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமுறையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெ. மகேந்திரன்.
புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பு வாகன தணிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை  திறம்பட செய்யும் விதமாக இம் மாவட்டத்தில் சிறப்பு படை அமைக்கப்பட்டு அதில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதிவேகத்தை அளவிட்டுக் காட்டும் கருவி ஆகியவற்றை உபயோகிப்பது பற்றி வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர்  கணேசன் சிறப்பு பயிற்சியை அளித்தார். தொடர்ந்து, அந்தக் கருவிகளை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது:  புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிப்பவர்கள், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தேவையற்ற கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சப்தமிடுதல், பெண்களை கேலி செய்தல், திறந்த வெளியில் மது அருந்துதல், சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இடையூறு செய்வோர், பைக் பந்தயம் போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு அதனால் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக அதிகமான சப்தத்தில் வெடி வைத்தல் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →