திருச்செந்தூர் அருகே ஓட்டுநர் சாவு: போலீஸார் தாக்கியதில் இறந்ததாக புகா
திருச்செந்தூர் அருகே போலீஸார் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகே போலீஸார் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகேயுள்ள வெள்ளாளன்விளை, சுதந்திரநகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த மோசஸ் மகன் சதீஸ்பாபு (35). ஓட்டுநர். இவரது மனைவி ராதிகா (32). தம்பதிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சதீஸ்பாபு தனது குழந்தையை பார்க்க மனைவியின் ஊரான தேரிப்பனைக்கு சென்றாராம். அப்போது அங்கு குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்குவந்த மெஞ்ஞானபுரம் போலீஸார் சதீஸ்பாபுவை தாக்கினராம். பின்னர், ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பின்னர், அவரை காவல்துறையினர் அங்கேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை பரமன்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை வீட்டிலிருந்த சதீஸ்பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். உறவினர்கள் அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.
போலீஸார் தாக்கியதில் சதீஸ்பாபுவுக்கு உடலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனாலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் இறந்து விட்டதாகவும் கூறி, அவரது உறவினர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.