தூத்துக்குடி

காற்றாலை நிறுவனங்களால் சேதப்படுத்தப்படும் நீர் நிலைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலை நிறுவனங்களால் நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலை நிறுவனங்களால் நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி புறநகர், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக, பல ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியும், சில விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்கு வாங்கியும் அந்த நிறுவனங்கள் காற்றாலையை அமைத்து வருகின்றன.
இதனிடையே, அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களில் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக புகார் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில், குளங்களுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய்களை மூடிவிட்டதாகவும்,  நீர் ஆதாரங்களை சேதப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் அண்மையில் உத்தரவிட்டார்.
ஆனால், ஏறத்தாழ ரூ. 2 கோடி வரை பிணைத் தொகையை செலுத்திவிட்டு காற்றாலை நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. காட்டாற்று வெள்ளம் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு பயிரிடப்படும் மானாவாரி விவசாயப் பயிர்கள் தற்போது பெரிய அளவில் விளைச்சலை தராத நிலையில், குளங்களுக்கு செல்லும் கால்வாய்கள் சேதப்படுத்தப்படுவதும், மூடப்படுவதும் தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் எம். மன்சூர் அலி கூறியது: ஓட்டப்பிடாரம் பெரிய குளத்துக்கு ஆரைக்குளம், ஓசனூத்து பெரிய கால்வாய் வழியாக தண்ணீர் வரும். ஆனால், தற்போது அந்த பெரிய கால்வாயின் இருபுறமும் கரையை உடைத்தும், கால்வாய் நடுப்பகுதியை மூடியும் தனியார் காற்றாலை நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே. பொன்ராஜ் கூறியது: புதியம்புத்தூர் மலர் குளத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து 30 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மலர் குளத்துக்குச் செல்லும் கால்வாய் தனியார் காற்றாலை நிறுவனங்களால் மூடப்பட்டு அந்தப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, ஜம்புலிங்கபுரத்தில் தடுப்பணை உடைக்கப்பட்டிருப்பதோடு,  குலசேகரநல்லூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சரள் மண்ணும் அள்ளப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை அந்த நிறுவனங்கள் மூலமே சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் கூறியது: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நில அளவை செய்யப்பட்டு ஏறத்தாழ 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புகார்களின் அடிப்படையில் மற்ற பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT