இனாம்மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்
கோவில்பட்டி வட்டம், இனாம்மணியாச்சி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும்
கோவில்பட்டி வட்டம், இனாம்மணியாச்சி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இனாம்மணியாச்சி ஊராட்சியில் போதுமான துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும். சமுதாய நலக் கூடத்துக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவேண்டும், இலக்குமி ஆலை மேம்பாலத்தில் நடைபெறும் வாகன சோதனையை தவிர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இனாம்மணியாச்சி கிளை சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கட்சியின் ஒன்றியச் செயலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் அழகுமுத்து, விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். இதில், கட்சி நிர்வாகிகள் ராமசுப்பு, வெங்கடாசலம், பெருமாள்சாமி உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட கோரிக்கை மனு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வழங்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.