800 கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 800 கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் 800 கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் - திட்டங்குளம் வரை மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைப்பதற்கு பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.30 லட்சமும், ஊரக சாலை மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.51 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் பணியை தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து, இலக்குமி ஆலை பாலம் முதல் லாயல் நூற்பாலை பாலம் வரை ரூ.7 கோடி செலவில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியசாமிபுரம், அகிலாண்டபுரம் பகுதிகளில் புதிதாக கால்நடை கிளை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் கால்நடை மருத்துவர்கள் 800 பேர் நியமிக்கப்படவுள்ளனர். கால்நடை உதவியாளர்கள் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
பல்வேறு வகையான காளைகள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றின் இனப்பெருக்கத்துக்காக 7 இடங்களில் மருத்துவ ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. கால்நடை பராமரிப்புத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் விரைவில் தொடங்கிவைக்கிறார் என்றார் அவர்.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் கூறியது: கூட்டுறவு தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வரும், துணை முதல்வரும் கலந்துபேசி முடிவு செய்வர் என்றார் அவர்.
தொடர்ந்து, நாலாட்டின்புத்தூரையடுத்த துரைச்சாமிபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டார் அறையுடன் கட்டப்பட்ட கட்டடம், கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பெரியசாமிபுரம், அகிலாண்டபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசினர் கால்நடை மருத்துவ கிளை நிலையம் ஆகியவற்றை, ஆட்சியர் தலைமையில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர்கள் ஜான்சன் தேவசகாயம் (கோவில்பட்டி), முருகானந்தம் (கயத்தாறு), ஒன்றிய ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.